திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெடிகுண்டு நிபுணர்கள் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலை ஒட்டி செல்லும் 14 கிலோ மீட்டர் கொண்ட கிரிவலப் பாதையில், மாதந்தோறும் வரும் பௌர்ணமி தினங்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்வது வாடிக்கை.
இந்நிலையில், மிக முக்கியத்துவம் வாய்ந்த சித்ரா பௌர்ணமி தினம் நாளை நடைபெறுகிறது. இதனால் அங்குக் கிரிவலம் மேற்கொள்ள வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து 30 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனடிப்படையில், மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெடிகுண்டு நிபுணர்கள் 6 குழுக்களாகப் பிரிந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
குறிப்பாகத் திருவண்ணாமலைக்குச் செல்லும் 9 பிரதான சாலைகளில், தற்காலிக பேருந்து நிலையங்கள், கார் நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டு அங்கும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.