பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைகாடு பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரபிக்கடல் அருகே சுயம்புவாக வீற்றிருக்கும் மண்டை காடு பகவதி அம்மன் கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
2021ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் இந்த கோயிலின் மேற்கூரை சேதமடைந்தது. இதனைத் தொடர்ந்து ஒன்றரை கோடி ரூபாய் செலவில் கோயிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்ற நிலையில், கடந்த 6ஆம் தேதி யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
கடந்த 8ஆம் தேதி அரபிக்கடலில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீருக்குச் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்ட நிலையில், மேளதாளங்களுடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு புனித நீர், கோயில் கோபுரத்தின் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் அமைச்சர் சேகர்பாபு உட்படத் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவையொட்டி கடற்கரை பகுதி மற்றும் கோயில் வளாகத்தைச் சுற்றி 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.