பாகிஸ்தான் குற்றவாளி ஒருவருடன் கூட்டுச் சேர்ந்த அமெரிக்க நிறுவனம், 26 பேரைப் பலிவாங்கிய பயங்கரவாத தாக்குதலுக்கு முன் பஹல்காமின் உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்களை வழங்கியுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
செயற்கைக்கோள் கண்காணிப்பு உளவுத்துறையின் முதுகெலும்பாக மாறிவிட்டது. ஆயுத நிறுவல்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு, துருப்புக்களின் நடமாட்டம், கடத்தல் மற்றும் சட்டவிரோத எல்லை ஊடுருவல், ஆகியவற்றைக் கண்காணிக்கவும், தெருக்களில் நடந்து செல்லும் நபர்களின் முக அடையாளங்களைக் காணவும், எல்லா நாடுகளும் செயற்கைக் கோள் படங்களைப் பயன்படுத்தப்படுகின்றன.
30 சென்டிமீட்டர் அளவுக்குக் கூர்மையுடைய உயர் திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்களின் உதவியால் மட்டுமே துல்லியமான தாக்குதல்களை நடத்த முடிகிறது. உயர் திறன் கொண்ட செயற்கைக் கோள் படங்களை வழங்கும் நிறுவனங்களில் முன்னணியில் உள்ள நிறுவனம் மேக்சர் டெக்னாலஜிஸ் ஆகும். உலகின் மிகவும் மேம்பட்ட பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை வைத்துள்ள இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக பல்வேறு நாடுகள் உள்ளன.
ரஷ்யாவுக்கு எதிரான போரில், இந்நிறுவனத்தின் சேவையை உக்ரைன் வாங்கி பயன்படுத்தி உள்ளது. இந்திய பாதுகாப்பு அமைச்சகம் (MoD), இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) மற்றும் 11 விண்வெளி தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்கள் இந்த நிறுவனத்தின் சேவைகளைப் பெற்றுள்ளன.
இந்நிலையில் தான், கடந்த பிப்ரவரி 2ம் தேதி முதல் பிப்ரவரி 22 ஆம் தேதி வரை, ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மற்றும் அனந்த்நாக், பூஞ்ச், ரஜோரி மற்றும் பாரமுல்லா போன்ற சென்சிட்டிவான பகுதிகளின் உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக் கோள் படங்களுக்கான ஆர்டர்களை அமெரிக்காவின் மேக்சர் பெற்றுள்ளது.
பயங்கரவாத தாக்குதலுக்கு 10 நாட்களுக்கு முன்பாக, பஹல்காமின் உயர் தெளிவுத்திறன் படத்திற்கான ஒரு ஆர்டர் ஏப்ரல் 12 ஆம் தேதி வந்துள்ளது.
பஹல்காம் தாக்குதல்களைத் திட்டமிடுவதற்காக இந்தப் படங்கள் பயன்படுத்தப் பட்டதா? என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், அதற்கான காரணங்கள் உள்ளன. எனவே, மேக்சர் டெக்னாலஜிஸ், இந்தியாவின் புலனாய்வு விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப் படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
முன்னதாக, 2024ம் ஆண்டு, ஒபைதுல்லா சையத் என்று பாகிஸ்தானியரின் பிசினஸ் சிஸ்டம்ஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் (BSI) உடன் மேக்சர் டெக்னாலஜிஸ் கூட்டுச் சேர்ந்துள்ளது. பாகிஸ்தானில், மேக்சரின் படங்கள் உள்ளூர் மறுவிற்பனையாளரான பிசினஸ் சிஸ்டம்ஸ் இன்டர்நேஷனல் (BSI) மூலம் விநியோகிக்கப்படுகின்றன. இது மேக்சரின் இணையத்தளத்தில் பகிரங்கமாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
1990 ஆம் ஆண்டு முதல், BSI Synthetic Aperture Radar (SAR) மூலம் எடுக்கப்படும் 2D, 3D மற்றும் 4D செயற்கைக் கோள் படங்களை வழங்கி வருகிறது. ஒபைதுல்லா சையத்தின் பிசினஸ் சிஸ்டம்ஸ் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் தலைமையிடம் கராச்சியில் உள்ளது. இந்நிறுவனத்துக்கு லாகூர், இஸ்லாமாபாத் மற்றும் பைசலாபாத்தில் கிளை அலுவலங்கள் உள்ளன.
மென்பொருள் பயன்பாட்டுத் தீர்வுகள் மற்றும் உயர் செயல்திறன் கொண்ட கணினி உபகரணங்களை( Pakistan Atomic Energy Commission ) பாகிஸ்தான் அணுசக்தி ஆணையத்துக்குச் சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்ததாக ஒபைதுல்லா சையத் மீது குற்றம் சாட்டப் பட்டது.
PAEC உயர் வெடிபொருட்கள் மற்றும் அணு ஆயுத பாகங்களை வடிவமைத்துச் சோதிக்கும் மற்றும் திட எரிபொருள் பாலிஸ்டிக் ஏவுகணைகளை உருவாக்கும் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
உரிமம் இல்லாமல் நிறுவனம் நடத்தியதையும், 2006 மற்றும் 2015க்கு இடையில் தவறான ஏற்றுமதி ஆவணங்களைச் சமர்ப்பித்ததாகவும் செய்த குற்றங்களை ஒபைதுல்லா சையத் ஒப்புக்கொண்டார் இந்த வழக்கில், குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட சையத்துக்கு, 366 நாட்கள் சிறைத் தண்டனை வழங்கி அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு முந்தைய வாரங்களில், பஹல்காமைச் சுற்றியுள்ள பகுதியில் பணி நியமன நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருந்ததாகவும் மேக்சரின் தரவுகள் காட்டுகின்றன.
இந்த மேக்சர் தரவுகளின் உதவியுடன் தாக்குதலைத் திட்டமிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுக்கிறது. அதற்கான சாத்தியத்தை நிராகரிக்க முடியாது என்று கூறப்படுகிறது. மேலும், நாட்டின் பாதுகாப்பில் வணிக செயற்கைக்கோள் படங்களின் பங்கு குறித்த முக்கியமான கேள்விகளை இது எழுப்புகிறது.