இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளும், 35க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவத்தினரும் கொல்லப்பட்டதாக முப்படை தளபதிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்த நடவடிக்கைக்கு பின் ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜென்ரல் ராஜீவ் காய் தலைமையில் முப்படைகளின் மூத்த அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜென்ரல் ராஜீவ் காய், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை பயங்கரவாதிகளை மட்டுமே குறி வைத்து நடத்தப்பட்டதாக தெரிவித்தார். பாகிஸ்தானின் பல இடங்களில் பயங்கரவாத முகாம்கள் செயல்பட்டது தெரியவந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதையடுத்து பேசிய AIR MARSHAL ஏ.கே.பார்தி, பாகிஸ்தானின் முரிட்கே பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம் மீது இந்திய ராணுவம் துல்லியத் தாக்குதலை நடத்தியதாக தெரிவித்தார். பயங்கரவாத முகாம்களை தவிர வேறு எங்கும் தாக்குதல் நடத்தவில்லை எனவும் ஏ.கே.பார்தி விளக்கமளித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய வைஸ் அட்மிரல் ஏ.என்.பிரமோத், இந்தியா நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளும், 35-க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவத்தினரும் கொல்லப்பட்டதாக தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பாகிஸ்தான் போர் கப்பல்களின் நகர்வுகளை இந்திய கடற்படை நன்கு அறிந்திருந்ததாகவும் கூறினார்.