இந்தியா – பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், எல்லையோர மாநிலங்களில் அமைதி நிலவுகிறது.
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, பாகிஸ்தானில் அமைக்கப்பட்டு இருந்த பயங்கரவாதிகளின் முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது.
ஆப்ரேஷன் சிந்தூர் என்ற இந்தியாவின் தாக்குதலுக்கு பல்வேறு வரவேற்புகள் கிடைத்த நிலையில், எல்லைப்பகுதிகளில் உள்ள ஜம்மு – காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலுக்கும் இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்தது. கடந்த 4 நாட்களாக போர் பதற்றம் நீடித்த நிலையில், தாக்குதலை நிறுத்திக் கொள்வதாக இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன.
இந்த போர் நிறுத்தத்தை தொடர்ந்து, ஜம்மு – காஷ்மீரின் பூஞ்ச், ரஜோரி உள்ளிட்ட மாவட்டங்களில் தாக்குதல் நடைபெறாததால் மக்கள் நிம்மதியடைந்தனர். இதே போல பஞ்சாபின் அமிர்தசரஸ், ஜலந்தர் ஆகிய மாவட்டங்களிலும், ராஜஸ்தானின் ஜெய்சால்மர், பார்மர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் தாக்குதல் இல்லாததால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்.
எனவே எல்லை மாநிலங்கள் குண்டு சத்தம், அலார ஒலி உள்ளிட்டவை இல்லாமல் வழக்கம் போல கடைகள் திறக்கப்பட்டும், பொதுமக்கள் வெளியே நடமாடுவதுமாக காட்சியளிக்கின்றன.