போர் பதற்றம் காரணமாக, எல்லையோர மாநிலங்களில் மூடப்பட்ட 32 விமான நிலையங்களையும் மீண்டும் திறக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளை குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதல்களையும் இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது.
இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்ததால், பாதுகாப்பு கருதி எல்லையோர மாநிலங்களில் 32 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. தொடர்ந்து, இந்தியத் தாக்குதலில் நிலைகுலைந்த பாகிஸ்தான் சமரச பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்ததால், தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், ஹிமாச்சல் உள்ளிட்ட மாநிலங்களில் போர் பதற்றம் காரணமாக மூடப்பட்ட 32 விமான நிலையங்களையும் மீண்டும் திறக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.