ஆபரேஷன் சிந்தூரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கு பிரார்த்தனைக்குத் தலைமை தாங்கியவர் பயங்கரவாதி அல்ல அப்பாவி என்று பாகிஸ்தான் கொடுத்த ஆதாரமே, அவர் உலகளாவிய பயங்கரவாதி என்பதை நிரூபித்து உள்ளது. யார் அந்த பயங்கரவாதி ? பாகிஸ்தான் கொடுத்த ஆதாரம் என்ன ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பயங்கரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை இந்தியா எடுத்தது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 பயங்கரவாத தளங்கள் மற்றும் 21 பயங்கரவாத பயிற்சி முகாம்கள் குறிவைத்து முற்றிலுமாக அழிக்கப்பட்டது.
இந்த தாக்குதலில், லஷ்கர்-இ-தொய்பா,ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்புக்களின் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப் பட்டனர்.
லஷ்கர் இ தொய்பா பொறுப்பாளர் முடாசர் காதியன் காஸ் என்ற அபு ஜுண்டல், ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த முகமது யூசுப் அஸார் என்கிற உஸ்தாத், காலித் என்கிற அபு ஆகாஷா, ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பொறுப்பாளர் ஹபீஸ் முகமது ஜமீல், ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தளபதி முகமது ஹசன் கான் ஆகியோர் ஆப்ரேஷன் சிந்தூரில் பலியான முக்கிய பயங்கரவாதிகள் ஆவார்கள்.
பாகிஸ்தான் தேசியக் கொடி போர்த்தப் பட்ட பயங்கரவாதிகளின் சவப்பெட்டிகளுக்கு, பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை தளபதி ஜெனரல் அசிம் முனீர், பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாஸ் சார்பாக மலர்வளையம் வைத்து மரியாதை செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவ மரியாதையுடன் நடந்துள்ளது பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கு.
உலகளாவிய பயங்கரவாதியான ஹபீஸ் அப்துல் ரவூஃப் தலைமையில் நடந்த இறுதிச் சடங்கில், லெப்டினன்ட் ஜெனரல் ஃபயாஸ் ஹுசைன் ஷா,மேஜர் ஜெனரல் ராவ் இம்ரான் சர்தாஜ், பிரிகேடியர் முகமது ஃபுர்கான் ஷபீர்; பஞ்சாப் மாநில காவல் ஆய்வாளர் உஸ்மான் அன்வர் மற்றும் பஞ்சாப் மாகாண சட்டமன்ற உறுப்பினர் மாலிக் சோஹைப் அகமது பெர்த் மற்றும் ராணுவத் தளபதிகள், வீரர்கள் உட்படப் பாகிஸ்தானின் அரசின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
பாகிஸ்தானின் SAMAA TV காட்டிய பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. பயங்கரவாதிகளுக்கு இராணுவ உயர் அதிகாரிகள் முன்னிலையில் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படுவது ஏன்? என்று இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி கேள்வி எழுப்பினார்.
மேலும், அமெரிக்காவால் உலகளாவிய பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட லஷ்கர்-இ-தொய்பாவின் உயர்மட்ட தளபதியான ஹபீஸ் அப்துல் ரவூஃப், பலியான பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்குகளைத் தலைமையேற்று வழிநடத்தும் புகைப்படத்தையும் விக்ரம் மிஸ்ரி வெளியிட்டார்.
இந்நிலையில்,அப்பாவி இஸ்லாமியரான ரவூஃப்புக்கும் பயங்கரவாதத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் ராணுவத்தின் முதன்மை செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி கூறிய நிலையில், ரவூஃப் ஒரு உலகளாவிய லஷ்கர் இ தொய்பாவின் பயங்கரவாதி என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான் வழங்கிய ரவூஃப்பின் அடையாளச் சான்று தகவல்கள், அமெரிக்க அரசு பதிவு செய்துள்ள ஹபீஸ் அப்துல் ரவூப்பின் விவரங்களுடன் சரியாகப் பொருந்துகின்றன. ரவூப்பின் பிறந்த தேதி 1973 மார்ச் 25 என்றும், அவரது தேசிய அடையாள எண் 35202-54004-13-9 என்றும் பாகிஸ்தான் ஆதாரம் வெளியிட்டது. ரவூப்பை பயங்கரவாதி என்று அமெரிக்கா அறிவித்துள்ள தரவுகளிலும் இந்த தேசிய அடையாள எண்ணும் பெயரும் ஒத்துப்போகிறது.
2006 ஆம் ஆண்டு நடந்த மும்பை இரயில் குண்டு வெடிப்பு , 2008 ஆம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதல் உட்பட, லஷ்கர்-இ-தொய்பாவின் நடவடிக்கைகளை எளிதாக்குவதில் ரவூப் ஈடு பட்டிருந்தார். ஏற்கெனவே, 2001 ஆம் ஆண்டு,லஷ்கர் இ தொய்பாவை ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாகவும், அதன் தலைவர் ஹபீஸ் அப்துல் ரவூப்பை உலகளாவிய பயங்கரவாதியாகவும் அமெரிக்கா அறிவித்தது.
தொடர்ந்து, லஷ்கர்-இ-தொய்பாவின் நிதி மற்றும் தளவாட வலையமைப்பில் முக்கிய பங்கு வகித்த லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் அப்துர் ரவூப்பை, 2010 ஆம் ஆண்டில், சிறப்பு உலகளாவிய பயங்கரவாதியாக (SDGT) அமெரிக்கா அறிவித்தது. மேலும், அமெரிக்காவில் உள்ள அவரது சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டன.
ஒரு அப்பாவியாக ஹபீஸ் அப்துர் ரவூஃப்பை சித்தரிக்க முயன்ற நிலையில், பாகிஸ்தான் கொடுத்த ஆதாரங்கள் மூலமாகவே, அவர் அமெரிக்காவின் சிறப்புப் பட்டியலில் உள்ள உலகளாவிய பயங்கரவாதி என்பது நிரூபணம் ஆகியுள்ளது.