ஜம்மு காஷ்மீரின் ஷோபியானில் தீவிரவாதிகளுக்கும் – இந்திய ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அமலில் இருந்தாலும் பாகிஸ்தான் ஆக்கிமிரப்பு எல்லையில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவும் பயங்கரவாதிகளை அழிக்கும் நடவடிக்கைகளை இந்திய ராணுவம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சோபியான் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் தீவிர வேட்டையில் இறங்கிய இந்திய ராணுவத்தினர் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினர்.
பின்னர் இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகளை ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர்.
இது தொடர்பாகப் பேசிய பாதுகாப்புப் படை உயர் அதிகாரிகள் சுக்ரு வனப்பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் அங்குச் சென்றதாகவும், அங்குப் பதுங்கியிருந்த 3 பயங்கரவாதிகளை தாங்கள் அழித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.