பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளை எல்லாம் வானிலேயே தவிடு பொடியாக்கிய ஆகாஷ் ஏவுகணையின் தாக்கும் திறனைப் பார்த்து உலக வல்லரசு நாடுகளே வியப்பில் உள்ளன. ஆப்ரேஷன் சிந்தூரின் அபார வெற்றிக்குக் காரணமான ஆகாஷ் ஏவுகணைத் திட்டம் பற்றியும், அதை உருவாக்கிய DRDO விஞ்ஞானிகளின் அயராத உழைப்பும், அர்ப்பணிப்பும் பற்றியும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஆப்ரேஷன் சிந்தூர் என்ற இராணுவ நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத தளங்கள் உட்பட 21 பயங்கரவாத பயிற்சி முகாம்கள் தரைமட்டமாக்கப் பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப் பட்டனர்.
இதற்குப் பின், இந்திய ராணுவ உள்கட்டமைப்பைக் குறிவைத்தும், மேற்கு எல்லை முழுவதும் இந்திய வான்வெளியில் அத்துமீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது.அமிர்தர்ஸ பொற்கோயில் உட்பட இந்தியாவின் 36 இடங்களைக் குறி வைத்து, சுமார் 400 ட்ரோன்களையும் ஏவுகணைகளையும் பாகிஸ்தான் ஏவியது.
இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளைச் சோதிக்கவும், உளவு பார்க்கவும், இந்தியாவின் முக்கிய நகரங்களைத் தாக்கவும் எண்ணிய பாகிஸ்தான், பெரிய அளவிலான வான்வழி ஊடுருவல் முயற்சிகளை மேற்கொண்டது. S 400, AKASH, SPYDER, MRSAM, BARAK 8 ஆகிய வான் பாதுகாப்பு அமைப்புகள், பாகிஸ்தான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களைக் கண்டறிந்து, இடைமறித்து அழித்துள்ளன. சொல்லப்போனால், நாட்டின் வான் பரப்புக்கு ஒரு கவசமாக நின்று பாதுகாத்துள்ளன. இந்தியாவைத் தாக்கப் பாகிஸ்தான் எடுத்த அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப் பட்டன.
இவற்றில், இந்தியாவின் மேற்கு எல்லையைப் பாதுகாப்பதில், முழுவதும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணை அமைப்பு முக்கிய பங்கு வகித்தது. ஆகாஷ்-குறுகிய தூரத் தரையிலிருந்து வான் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பாகும். வெறும் 20 நொடிகளில் 30 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஆகாஷ், செங்குத்தாக 18 கிலோமீட்டர் உயரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டதாகும்.
மணிக்கு 3,000 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ஆகாஷ், ஒரே நேரத்தில் 12 இலக்குகளைத் தாக்கும் வல்லமை கொண்டதாகும். சுமார் 2000 சதுர கிலோமீட்டர் வான் பரப்பைப் பாதுகாக்கும் வகையில் இந்த ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பு வடிவமைக்கப் பட்டுள்ளது.
ஆகாஷ் ஏவுகணையை, DRDO-வின் விஞ்ஞானி டாக்டர் பிரகலாத் ராமராவ் தான் உருவாக்கியுள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவரும், இந்தியாவின் ஏவுகணை நாயகனும் ஆன APJ அப்துல் கலாம் தான், டாக்டர் பிரகலாத் ராமராவை ஆகாஷ் ஏவுகணைத் திட்டத்தின் இயக்குனராக தேர்ந்தெடுத்தார்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட ஆகாஷ் திட்டத்தில் மிகக் குறைந்த வயதுடைய இயக்குனராக பிரகலாத் பணியாற்றியுள்ளார். 1994 ஆம் ஆண்டு 300 கோடி ரூபாய் செலவில் ஆகாஷ் ஏவுகணைத் திட்டம் தொடங்கப்பட்டது. பல தோல்விகளுக்குப் பிறகு, பல சவால்களுக்குப் பிறகு, பல சோதனைகளுக்குப் பிறகு ஆகாஷ் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது.
பாலகோட் தாக்குதலையடுத்து, கூடுதல் வான் பாதுகாப்பு அமைப்புகள் தேவை என்ற நிலையில், 2019ம் ஆண்டு, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்திய விமானப்படைக்கு 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆகாஷ் ஏவுகணைத் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கியது. மேலும், 17,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள ராணுவ டெண்டரை, ஆகாஷுக்கு ஆதரவாக மத்திய அரசு ரத்து செய்தது.
சூப்பர்சோனிக் F-16 போர் விமானங்கள் போன்ற அதிவேக அச்சுறுத்தல்களைத் தடுக்கும் வகையில் ஆகாஷ் ஏவுகணைத் திட்டம் பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் மறு உருவாக்கம் செய்யப்பட்டது. வான்வழியாக எதிரிகள் நடத்தும் தாக்குதல்களை எதிர்கொள்ள ஆகாஷ் ஏவுகணைகள் உருவாக்கப்பட்டன என்று கூறியுள்ள விஞ்ஞானி டாக்டர் பிரகலாத் ராமராவ், ஆகாஷை உருவாக்குவதில் தானும் பணியாற்றி இருப்பதை நினைக்கும் போது பெருமிதமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தற்போது 78 வயதாகும், டாக்டர் பிரகலாத் ராமராவ், பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஆகாஷ் துரத்தித் துரத்தி தாக்கி அழித்த நாள் தான் தனது வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான நாள் என்றும் தெரிவித்துள்ளார். 100 சதவீதம் பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளை வானிலேயே இடைமறித்து அழிக்கும் ஆகாஷ் ஏவுகணையின் திறனை உலகமே பாராட்டி உள்ளது.
ரஷ்யாவின் S-400 க்கு இணையாக எதிரிகளின் ஏவுகணைகளைத் துல்லியமாகத் தாக்கிய ஆகாஷ்,நாட்டையே பாதுகாத்துள்ளது. ஒவ்வொரு இரவிலும் நமது பாதுகாப்பைப் பற்றி கொஞ்சமும் கவலைப் படாமல் தூங்கச் செல்கிறோம் என்றால், எல்லையைப் பாதுகாக்கும் துணிச்சலான இராணுவ வீரர்களே காரணம். கூடுதலாக , இந்திய வான் எல்லையைப் பாதுக்காக்கும் ஆகாஷ் போன்ற ஏவுகணையை உருவாக்கிய இந்திய விஞ்ஞானிகளே காரணம். அவர்களுக்கு நன்றி சொல்வது ஒவ்வொரு இந்தியரின் கடமையாகும்.