தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம், சூலூர் சுற்றுவட்டார பகுதிகளான காடாம்பாடி, காங்கேயம்பாளையம், கண்ணம் பாளையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் முசிறி சுற்று வட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினார். மேலும் சாலையில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த இரும்பூதிபட்டி இலங்கை தமிழர் குடியிருப்பில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் 30க்கு மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் பெயர்ந்து சேதமடைந்தன. மேலும் பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதியடைந்தனர்.