டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து அளித்த புகாரின் அடிப்படையில், உடன்குடியில் சாலையை ஆக்கிரமித்துக் கட்டப்படும் கோயிலை அகற்றக் கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி பெருமாள்புரம் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து கோயில் கட்டப்படுவதாக, ஜி.பி.முத்து குற்றம்சாட்டினார்.
மேலும், பெருமாள்புரத்தில் உள்ள கீழத்தெருவைக் காணவில்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர் புகாரளித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருதரப்பினர் சார்பில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. .
அப்போது சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த கோட்டாட்சியர், பொதுப்பாதைக்கு இடையூறாக உள்ள கட்டுமானத்தை மட்டும் அகற்ற உத்தரவிட்டார். இதனை அடுத்து இருதரப்பும் கைகளைக் குலுக்கி சமாதானமாகச் சென்றனர்.