நடிகர் சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் உள்ள கோவிந்தா… கோவிந்தா… பாடலில் இடம் பெற்றிருந்த சர்ச்சை வரிகளை நீக்கியுள்ளதாகப் படத் தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நடிகர் சந்தானம் நடித்த டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள, கோவிந்தா… கோவிந்தா… எனும் பாடல் திருப்பதி ஏழுமலையானை இழிவுபடுத்தும் விதமாக எழுந்துள்ளதாக கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இது தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கின் மனுவில், பக்தி பாடலின் வரிகளை மாற்றி வெங்கடேஸ்வரரை அவமதிக்கும் வகையில் பாடல் அமைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
மதத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ள இந்த பாடலுடன் படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் எனவும் அதில் கோரப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது, குறிப்பிட்ட பாடலில் இடம்பெற்ற ஆட்சேபத்துக்குரிய வரிகள் நீக்கப்பட்டு, பாடல் மாற்றியமைக்கப்பட்டு புதிய சென்சார் சான்று பெறப்பட்டுள்ளதாகப் படத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.
அப்போது எந்த மதங்களுக்கும் அவதூறு ஏற்படுத்த அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், பாடலின் டியூனை மியூட் செய்வது குறித்து விளக்கம் தர அறிவுறுத்தினர்.
இதனையடுத்து ஆட்சேபத்துக்குரிய பாடலின் டியூன் மியூட் செய்யப்பட்டு விட்டதாகப் படத்தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கூறப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வெள்ளிக்கிழமை விரிவான உத்தரவு பிறப்பிப்பதாகக் கூறி விசாரணையைத் தள்ளிவைத்தனர்.