தமிழகத்தில் உள்ள காவல் நிலையத்தின் கழிவறைகள் கைதிகள் மட்டும் வழுக்கி விழும் வகையில் உள்ளதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வழக்கு ஒன்றில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நபருக்கு இடது காலிலும், வலது கையிலும் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு உரிய சிகிச்சை வழங்க உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது கைது செய்யப்பட்ட நபருக்கு எவ்வாறு காயம் ஏற்பட்டது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், கழிவறையில் வழுக்கி விழுந்ததால் காயம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், காவல் நிலையங்களில் உள்ள கழிவறைகள் கைதிகள் மட்டும் வழுக்கி விழுந்து காயம் ஏற்படும் வகையில் உள்ளதா? என கேள்வி எழுப்பினர்.அந்த கழிவறைகளை ஆய்வாளர்கள் பயன்படுத்துவதில்லையா? என கேட்ட நீதிபதிகள், கழிவறைகளை பயன்படுத்தும் ஆய்வாளர்களுக்கு மட்டும் எதுவும் ஆகாதது எப்படி? என கேள்வி எழுப்பினர்.
இதுபோன்ற செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட காவலர்கள் பணியை இழக்கும் நிலை ஏற்படும் என்றும் எச்சரித்தனர்.