பா.ஜ.க போன்ற சிறப்பாக கட்டமைக்கப்பட்ட வேறு எந்த அரசியல் கட்சியையும் பார்த்ததில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் எழுதிய ‘போட்டியிடுவதில் ஜனநாயகப் பற்றாக்குறை’ புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய ப.சிதம்பரம் இண்டி கூட்டணி தற்போது ஒற்றுமையாக இருந்தாலும், பலவீனமாக இருப்பதாக கூறினார். ஆனால், சில நிகழ்வுகள் மூலம் அதை பலப்படுத்த முடியும் எனவும், அதற்கான கால அவகாசம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளையில், பா.ஜ.க மிகவும் வலிமையாக உள்ளது என்றும் அவர் கூறினார். தன்னுடைய அனுபவத்திலும், வரலாற்றிலும் பா.ஜ.க-வை போன்ற சிறப்பாக கட்டமைக்கப்பட்ட வேறு எந்த அரசியல் கட்சியையும் பார்த்ததில்லை என்றும் ப.சிதம்பரம் கூறினார்.
மேலும் பாஜக அனைத்து துறைகளிலும் வலிமையாக இருப்பதாகவும் ப.சிதம்பரம் தெரிவித்தார். ப.சிதம்பரம் பேசிய இந்த வீடியோவை பகிர்ந்த பா.ஜ.க-வின் பிரதீப் பண்டாரி, ‘ காங்கிரசுக்கு எதிர்காலம் இல்லை என்பது, ராகுல் காந்திக்கு நெருக்கமாக இருக்கும் தலைவர்களுக்கு கூட தெரிந்துள்ளது என விமர்சித்துள்ளார்.