திருப்பூர் மற்றும் ஈரோட்டில் தோட்டத்து வீடுகளில் வசித்த முதிய தம்பதிகளைக் கொன்று, நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சேமலை கவுண்டன்பாளையத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த தெய்வசிகாமணி என்ற முதியவர், அவரது மனைவி அலமேலு மற்றும் மகன் செந்தில் குமார் ஆகியோர் கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்டனர்.
அவர்களை கொலை செய்த மர்ம கும்பல், வீட்டில் இருந்த நகைகளையும் கொள்ளையடித்து சென்றது. அதேபோல ஈரோடு மாவட்டம் சிவகிரியில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வந்த முதியவர்களான ராமசாமி – பாக்கியம்மாள் தம்பதியும் கடந்த 1-ம் தேதி படுகொலை செய்யப்பட்டு, அவர்களின் வீட்டில் இருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவங்கள் தொடர்பாக போலீசார் தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் கிடைத்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் அரச்சலூரைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்களை ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். தேங்காய் பறித்துத் தருவதாகக் கூறி தோட்டத்து வீடுகளை நோட்டமிட்டு இந்த கும்பல், கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், இவ்விரு சம்பவங்களிலும் ஒரே கும்பல் ஈடுபட்டுள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.