தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஒரு மணிநேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால், பேருந்து நிலையம், பாகலூர் சாலை சந்திப்பு, ராயக்கோட்டை சாலை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் மழைநீர் தேங்கியது. மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதிகளில்
பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக, இரட்டைக்கண் பாலத்தின் கீழ் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதியடைந்தனர். பாரூர் இந்திரா நகரில் தண்ணீர் வடியதால் நோய்தொற்று ஏற்படும் சூழல் நிலவுகிறது. மழைநீர் வடிகால் வசதி முறையாக மேற்கொள்ளாததே இதற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார காலையில் இருந்து வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இரவில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளும் சாலையோர வியாபாரிகளும் கடுமையாக சிரமத்திற்குள்ளாகினர்.
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்ட எள் மற்றும் உளுந்து பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால் வேதனை அடைந்த விவசாயிகள் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நடவு செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் விளை நிலங்களில் தண்ணீர் தேங்கிய நிலையில், வீரணம் ஏரியிலிருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் வேதனை அடைந்த விவசாயிகள், பாசன வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாததே இதற்கு காரணமென குற்றம்சாட்டினர்.
இதேபோன்று, தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் இடியுடன் கூடிய கனமழையால் சாலைகளில் வெள்ளம்போல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். எனினும் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் சாலைகளில் கழிவுநீரோடு சேர்ந்து மழைநீரும் ஓடியது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.
கனமழை காரணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் உள்ள ஆறு மற்றும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக மாங்கனி ஓடை ,சங்கிலி பாறை,வழுக்குப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நீர் வரத்தைப் பொறுத்தே சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.