போலி தேன் விற்பனையால், தமிழகத்தில் மட்டும் உற்பத்தி செய்யப்பட்ட மூன்று லட்சம் கிலோ தேன் தேக்கமடைந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்னை, வாழை போன்ற பயிர்களுக்கு மத்தியில், விவசாயிகள் தேன் உற்பத்தி செய்து வருகின்றனர்.
இயற்கை சீற்றங்களுக்கு மத்தியில் தேன் உற்பத்தி செய்தும், உரிய லாபம் கிடைக்காததால் வேறு தொழிலுக்கு உந்தப்பட்டு வருவதாகத் தேன் உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தேனிலிருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுவதால் தேனுக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
தேன் உற்பத்தியாளர்களுக்குத் தனியாக நலவாரியம் அமைக்க வேண்டும் என்றும், சந்தையில் உள்ள போலி கலப்பட தேன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ரசாயன தேனுக்குப் பதிலாக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நாட்டுத் தேனுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் எனவும், பயிர்களைப் போன்று தேனுக்கும் இழப்பு காப்பீடு ஏற்படுத்தித் தரவேண்டும் என்றும் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.