பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்ரேஷன் சிந்தூர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து சீண்டி வரும் வங்கதேசத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக இந்திய ராணுவம், போர் பயிற்சியை நடத்தியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்திய ராணுவத்தின் உதவியால் தனிநாடான வங்கதேசம், இந்தியாவின் நட்பு நாடாக இருந்து வந்தது. கடந்த பத்தாண்டுகளாகவே இருநாடுகளுக்கும் இடையே நல்லுறவு வளர்ந்து வந்தது. ஆனால் ஷேக் ஹசீனா பதவி விலகிய பின் இந்திய வங்க தேச உறவுகள் மோசமடைந்துள்ளன.
இந்தியாவின் ஏழு வடகிழக்கு மாநிலங்களை நிலத்தால் முற்றிலும் சூழப்பட்ட பகுதிகளாக விவரித்த முகமது யூனுஸ், இந்த பிராந்தியத்தில் உள்ள “கடல் பகுதியின் ஒரே பாதுகாவலர் வங்கதேசம் என்றும் கூறினார். மேலும், அப்பகுதி சீனப் பொருளாதாரத்தின் விரிவாக்கமாக” மாற வேண்டும் என்று பரிந்துரைத்த யூனுஸ் கருத்துக்கு இந்தியாவில் கடும் கண்டனங்கள் எழுந்தன.
பூட்டான், நேபாளம் மற்றும் வங்கதேசத்தின் எல்லையாக சிலிகுரி பாதை உள்ளது. இது இந்தியாவின் எட்டு வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா, திரிபுரா, அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், நாகாலாந்து, சிக்கிம் மற்றும் மிசோரம் ஆகியவற்றை இணைக்கும் 22 கிலோமீட்டர் அகலமுள்ள “சிக்கன் நெக்” ஆகும்.
சிலிகுரி பகுதியை “இந்தியாவின் நிலப்பரப்பில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதி என்று புவிசார் அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். சிலிகுரி பாதையைக் குறிவைத்து, செயல்பட்டு வரும் சீனா, வடக்கு வங்கதேசத்தில் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான டீஸ்டா நதி திட்டத்துக்கு ஆர்வம் காட்டியுள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை நாட்டின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கக்கூடும் என்று இந்திய பாதுகாப்பு குறித்து திட்டங்களை வகுக்கும் கொள்கையாளர்கள் அஞ்சுகின்றனர்.
சிலிகுரி நடைபாதைக்கு அருகில் அமைந்துள்ள டீஸ்டா திட்டத்துக்குச் சீனாவின் கடன் உதவி, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும். டீஸ்டா நீர் மேலாண்மை திட்டத்துக்கு நிதியளிப்பது மட்டுமல்லாமல், வங்கதேசம் முழுவதும் மூன்று பெரிய மருத்துவமனைகளைக் கட்டுவதாகவும் சீனா அறிவித்துள்ளது. அதில் ஒன்று, சிலிகுரி பாதை அருகில் அமைய உள்ளது.
டீஸ்டா நதி இமயமலையில் உருவாகி, சிக்கிம் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்கள் வழியாகப் பாய்ந்து, வங்காளதேசத்திற்குள் நுழைந்து இறுதியில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. டீஸ்டா நதியின் நீர் பகிர்வு தொடர்பான பிரச்சினைகள் இரு நாடுகளுக்கும் இடையே தீர்க்கப் படாமலே உள்ளது.
இந்நிலையில் சீனாவின் பக்கம் சாயும் வங்க தேசத்துக்கு எச்சரிக்கையாக ‘எக்சர்சைஸ் டீஸ்டா பிரஹார்’ நடத்தப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் போர் விளையாட்டு எனப்படும், ‘எக்சர்சைஸ் டீஸ்டா பிரஹார்’ புதிய ஆயுதங்கள், போர்க்கள தொழில்நுட்பத்தைச் சோதிக்கும் பயிற்சியாகும். இராணுவத்தின் செயல்பாட்டுத் தயார்நிலை மற்றும் கூட்டுப் படை ஒருங்கிணைப்பை நிரூபிப்பதே இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.
இந்திய இராணுவத்தின் டீஸ்டா பிரஹார் பயிற்சி, சவாலான நதிக்கரை நிலப்பரப்பில் போர் தயார்நிலை, கூட்டு நடவடிக்கைகள் மற்றும் அதிநவீன ஆயுத அமைப்புகளை நிரூபித்துக் காட்டியது.
இந்திய ராணுவத்தின் முக்கிய போர் மற்றும் துணைப் பிரிவுகளான காலாட்படை, பீரங்கிப்படை, கவசப் படை, இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை, பாரா சிறப்புப் படைகள், ராணுவ விமானப் போக்குவரத்து, பொறியாளர்கள் மற்றும் சிக்னல்கள் ஆகியவை சமீபத்தில் பெரிய அளவிலான ஒருங்கிணைந்த களப் பயிற்சியான டீஸ்டா பயிற்சியை நடத்தியுள்ளன.
கடினமான நதிக்கரைப் பகுதியில் நடந்த இந்தப் பயிற்சி, யதார்த்தமான போர்க்கள நிலைமைகளின் கீழ் பல்வேறு ஆயுதங்கள் மற்றும் சேவைகளின் போர் செயல்திறன் மற்றும் ஒருங்கிணைப்பை மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டது.
இராணுவத்தின் திரிசக்தி படைப் பிரிவு, இந்தப் பயிற்சியின் சில காட்சிகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது. இது “புதிய யுகப் போரில்” இந்தியாவின் வலிமை மற்றும் உறுதியை நிரூபிக்கும் விதமாக இந்த பயிற்சி நடத்தப்பட்டதாகக் கூறப் படுகிறது.
இந்திய இராணுவப் பயிற்சி முடிவடைந்த சில நாட்களுக்குள், வங்க தேச ஆடைகளை இறக்குமதி செய்வதற்குக் கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி, கொல்கத்தா மற்றும் மும்பை ( Nhava Sheva ) நவா ஷேவா துறைமுகங்கள் வழியாக மட்டுமே நுழைய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வங்க தேச எல்லைக் காவல்படையின் முன்னாள் தலைவரும் யூனுஸ் நிர்வாகத்தின் முக்கிய நபரான மேஜர் ஜெனரல் ஃபஸ்லுர் ரஹ்மான், இந்தியா, பாகிஸ்தானைத் தாக்கினால், வங்க தேசம் வடகிழக்கு இந்தியாவின் ஏழு வடகிழக்கு மாநிலங்களை ஆக்கிரமிக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார்.
இதற்கெல்லாம் பதிலாகவே எக்சர்சைஸ் டீஸ்டா பிரஹார் ராணுவ பயிற்சி என்று புவிசார் அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.