மகாராஷ்டிரா மாநிலத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த இளைஞர் ஒருவரின் கண்டுபிடிப்பு உலகப் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்சையே வியப்படையச் செய்துள்ளது. அப்படி என்ன கண்டு பிடிப்பு ? அதனை கண்டுபிடித்தது யார் என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஒரே நேரத்தில் பரந்து பட்ட பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் வசதியோடு பயன்படுத்துவதற்கும் எளிமையாக இயக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட சூரிய ஒளி மருந்து தெளிப்பான் தான் இது. உலக நாடுகளே வியந்து பார்க்கும் இந்த மருந்து தெளிப்பானை உருவாக்கியதன் பின்னணியில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து பொறியியல் பயின்ற இளைஞரின் அபாரத் திறமையும், வலியும் நிறைந்திருக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் யோகேஷ் காவேண்டே கல்லூரி பயின்ற 2014-2015 கால கட்டம் அது. விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் யோகேஷின் குடும்பத்தில் மூத்த சகோதரர் பூச்சிக் கொல்லி மருந்தால் ஏற்பட்ட பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். மொத்த குடும்பமும் துயரத்தில் ஆழ்ந்த அந்த நேரத்தில் எங்களுக்காக எதாவது செய் எனத் தந்தை சொன்ன வார்த்தைகள் தான் யோகேஷுன் திறமைக்கு அடிப்படையாக அமைந்தது.
அவுரங்காபாத்தில் உள்ள கல்லூரியில் இந்தியப் பொறியியல் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது வேளாண் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கான பணியைத் தொடங்கினார். யோகேசுக்கு ஆதரவாக அவருடைய நண்பர்களும் களமிறங்கிய நிலையில் நியோ என்ற அமைப்பையும் உருவாக்கினர். கல்லூரியின் இறுதி ஆண்டுக்காகத் தயாரிக்கப்பட்ட சக்கர தெளிப்பான் கருவியைக் கல்லூரி நிர்வாகமோ, பேராசிரியர்களோ அங்கீகரிக்கும் வரை காத்திருக்காமல், நேரடியாக விவசாயிகளிடம் சென்று காட்சிப்படுத்தினர்.
அதன் தொடர்ச்சியாகக் கல்லூரி படிப்பு முடிந்த பின்பு சக்கர மருந்து தெளிப்பான் தயாரிப்பில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட யோகேஷ் மற்றும் அவரது குழுவினருக்குப் பொருளாதார வசதி மிகப்பெரிய தடையை ஏற்படுத்தியது. அப்போது யோகேஷின் தயாரிப்புக்குப் பாரதிய யுவ சக்தி அறக்கட்டளை உதவ முன்வந்தது. ஒரு வருடத்திற்கான ஊதியத்தை வழங்கி உறுதுணையாக இருந்த அந்த அறக்கட்டளை, யோகேஷின் தயாரிப்பை மேம்படுத்தவும் பக்கபலமாக இருந்தது.
அந்த அறக்கட்டளையின் உதவியோடு வங்கியிலிருந்து சுமார் 5 லட்சம் கடனாகப் பெற்ற யோகேஷ் தன் தயாரிப்பை முன்பைவிட வேகமாக முன்னெடுத்த போது தான் மற்றொரு யோசனையும் தோன்றியது. சக்கர அடிப்படையிலான தெளிப்பானைச் சூரிய சக்தியின் மூலமாக இயங்கும் தெளிப்பானாக மாற்றுவது தான் அந்த யோசனை. அதற்கான தொழில்நுட்பத்தைக் கண்டறிந்த யோகேசுக்கு குறுகிய காலத்திலேயே அதற்கான அங்கீகாரமும் கிடைத்தது.
குறிப்பாக, பெண் விவசாயிகள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட இந்த மருந்து தெளிப்பான் உலக பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்சின் கவனத்தையும் ஈர்த்தது. புதுடெல்லிக்கு அவர் வருகை தந்திருந்த போது இந்த மருந்து தெளிப்பானை அவரே இயக்கிப் பார்த்தது அதற்கான ஆதரவைத் தெரிவித்ததால், 12 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயிகள் பயன்படுத்தும் அளவிற்கு இந்த சக்கர மருந்து தெளிப்பானின் பரிமாணம் வளர்ச்சியடையத் தொடங்கியுள்ளது.
வளர்ச்சியை மட்டுமே அடுத்தடுத்து கண்டு கொண்டிருந்த யோகேசுக்கு கோவிட் தொற்று காலம் பெரும் சவால் மிகுந்த சூழலை உருவாக்கியது. இருப்பினும் மனம் தளராமல் தங்களின் வணிகத்தைத் தொடர்ந்த யோகேஷ் மற்றும் குழுவினருக்கு, வாடிக்கையாளர்களும் ஆதரவளிக்கத் தொடங்கினர். அதிலும் பில்கேட்ஸின் அங்கீகாரம் கிடைத்ததிலிருந்து இந்த மருந்து தெளிப்பானின் தேவையும் பன்மடங்கு அதிகரிக்கத் தொடங்கியது. பண்ணை இயந்திர மற்றும் சோதனை நிறுவனத்தால் அங்கீகாரம் பெற்றுள்ள இந்த சூரிய ஒளி மருந்து தெளிப்பான் மத்திய அரசின் மானியங்களுக்கும் தகுதியுடைவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சூரிய ஒளி மருந்து தெளிப்பானை வாங்கும் விவசாயிகளுக்கு 40 முதல் 50 சதவிகிதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. உலகளாவிய சந்தைக்குத் தனது தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த முடிவெடுத்த யோகேஷ் ஆப்பிரிக்க நாடுகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் இந்த திட்டத்தை எடுத்துச் செல்வதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
சாதாரண விவசாய குடும்பம் ஒன்றில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தின் போது உதித்த சிந்தனை, உலக நாடுகளே வியக்கும் அளவிற்கான சாதனையைப் படைத்துள்ளது. இளம் தொழில் முனைவோர் முன்னேறுவதைப் பொறுத்துத் தான் இந்திய விவசாயத்தின் எதிர்காலம் அமையும் என்பதில் திடமாக இருக்கும் யோகேஷ், வேளாண்மைத்துறையில் சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு இளைஞருக்கும் முன்னோடியாகத் திகழ்கிறார்.