ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீர் ரசாயன நுரையுடன் செல்வதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்குக் கர்நாடக தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து தண்ணீர் வருகிறது.
கர்நாடக மாநிலத்தில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகள் ரசாயன கழிவுகளை தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடுவதால், கெலவரப்பள்ளி அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் நுரை படலமாகக் காட்சியளிக்கிறது.
ஆண்டுதோறும் இதே நிலை நீடித்து வருவதாகக் குற்றம்சாட்டியுள்ள விவசாயிகள், இந்த முறையாவது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதனிடையே, கெலவரப்பள்ளி அணைக்கு வரும் ஆயிரத்து 448 கன அடி நீர் முழுவதும் தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளதால் தண்ணீர் ஆர்ப்பரித்துச் செல்கிறது. ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.