முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறக்கூடிய நிகழ்வுகளை உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து புறக்கணித்து வருவது திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. உதயநிதியின் ஆர்வமின்மை குறித்தும் அதன் மூலம் ஏற்பட்டிருக்கும் உட்கட்சி பூசல் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் கட்சியிலும் ஆட்சியிலும் உதயநிதியை முன்னிலைப் படுத்துவதற்கு திமுக தலைமையாலும், முதலமைச்சரின் குடும்பத்தாலும் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்துள்ளன.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அந்த தேர்தலில் உதயநிதியை முன்னிறுத்தி பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவருக்குத் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
மேலும் இந்திய அளவில் உதயநிதியைத் தமிழகத்தின் முகமாக மாற்ற வேண்டும் என்பதற்கான பல்வேறு விளம்பர முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் உதயநிதியிடம் இருக்கும் ஆர்வமின்மையும் மெத்தனமும் அதற்கான வாய்ப்பை தட்டிப்பறித்துவிட்டதாகச் சொந்த கட்சியினரே பேசும் சூழலை உருவாக்கியுள்ளது.
கட்சியின் உட்கட்டமைப்பை மாற்றுவதோடு, தன் ஆதரவாளர்கள் அதிகமானோருக்குப் பதவி வழங்க வேண்டும் என்ற உதயநிதி ஸ்டாலினின் கோரிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிராகரித்திருப்பதால் உட்கட்சி பூசல் கட்சியில் மட்டுமல்ல குடும்பத்திற்குள்ளாகவும் எழுந்திருக்கிறது.
அதன் வெளிப்பாடாக முதலமைச்சர் கலந்து கொள்ளும் பல்வேறு நிகழ்ச்சிகளை வேண்டுமென்றே உதயநிதி புறக்கணித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநருக்கு எதிரான வழக்கில் வெற்றி கண்டதாகக் கூறி முதலமைச்சருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவிலும், கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலும் உதயநிதி பங்கேற்காதது கட்சி வட்டாரத்தில் மிகப்பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதோடு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் துணை முதல்வர் பொறுப்பில் இருக்கும் உதயநிதி தொகுதி சார்ந்த நிகழ்வுக்குக் கூட உரிய நேரத்தில் செல்வதில்லை என்ற புகார் எழுந்திருக்கிறது. உதாரணமாக பத்து மணிக்கு நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்படுகிறது என்றால் உதயநிதி வருகை நேரம் என்பது குறைந்தபட்சம் 12 மணியாகத் தான் இருப்பதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே புலம்பும் அளவிற்கு உதயநிதி காலதாமதமாக வருவதாகவும் கூறப்படுகிறது.
தொகுதி நிகழ்ச்சிக்குக் கூட உரிய நேரத்தில் வரமுடியாத உதயநிதி அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் எப்படி பிரச்சாரம் செய்வார் என்ற கேள்வியும் திமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது.
மேலும் முதலமைச்சர் தொடங்கி மூத்த அமைச்சர்கள் வரை தலைமைச் செயலகத்திற்கு வந்து அவரவர் பணிகளைச் செய்து வரும் நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி தலைமைச் செயலகத்திற்கு வருவதில்லை என்ற புகாரும் எழுந்திருக்கிறது.
முக்கியமான ஆலோசனையாக இருந்தாலும் மூத்த அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை தமது குறிஞ்சி இல்லத்திற்கு வரவழைத்து உதயநிதி ஆலோசனை மேற்கொள்வதும் உதயநிதி மீதான அதிருப்திக்கு முக்கிய காரணமாகவும் அமைந்திருக்கிறது.
கட்சியில் இணைந்தவுடன் பொறுப்பு, அடுத்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு, இரண்டு ஆண்டுகளில் அமைச்சர், மூன்றாவது ஆண்டில் துணை முதலமைச்சர் என அடுத்தடுத்த ஏறுமுகங்களைச் சந்தித்து வந்த உதயநிதிக்கு அவரின் சோம்பலும், ஆர்வமின்மையே தொடர் சறுக்கலுக்கு முக்கிய காரணமாக அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் திமுகவின் உட்கட்சி பூசல் பூகம்பமாக வெடிக்கும் எனவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்