பிரதமர் மோடி இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றிக் கொண்டிருக்கிறார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றிக்கு காரணமான முப்படைகள் மற்றும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, நாமக்கல்லில் பாஜக சார்பில் பிரமாண்ட மூவர்ணக் கொடி பேரணி
நடைபெற்றது.
இதில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலை நடத்திய இந்திய ராணுவம், பிரதமர் மோடிக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் பேசிய எல்.முருகன், நாட்டில் 2013-ம் ஆண்டுக்கு முன்பு தீவிரவாதம் அதிகரித்து இருந்தது என குற்றம் சாட்டினார். தற்போது 50 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ராணுவ உபகரணங்களை ஏற்றுமதி செய்கின்றோம் எனவும் அவர் கூறினார். தீவிரவாதத்தை ஆதரிக்க முடியாது என கூறிய எல்.முருகன், தீவிரவாதம் எந்த எல்லையில் இருந்தாலும் வேருடன் அழிக்கப்படும் எனவும் உறுதிபட தெரிவித்தார்.
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தினால், அது ஆக்கிரமிப்பு காஷ்மீரை பற்றியே இருக்கும் எனவும் கூறினார். மேலும், 100வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது இந்தியா முதன்மை வல்லரசு நாடாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.