மத்திய அரசோடு இணக்கமான உறவு வைத்துக்கொண்டு தமிழகத்திற்குத் தேவையான திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் பெற வேண்டும் எனத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவு தினத்தையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்குத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நெல்லை மாவட்டத்தில் சிவந்தி கோப்பை கபடிப் போட்டி நடந்தபோது தான் பொருளாளராகச் செயல்பட்டதாகவும், சிவந்தி ஆதித்தனார் மறைவு வரை அவருடன் சேர்ந்து பணியாற்றியதாகவும் கூறினார்.
கடந்த ஆண்டுகளில் நிதி ஆயோக் கூட்டத்திற்கு முதலமைச்சர் செல்லாதது வருத்தத்துக்குரியது என்றும், தற்போது மத்திய அரசோடு இணக்கமான உறவு வைத்துக்கொண்டு தமிழகத்திற்குத் தேவையான திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் பெற வேண்டும் எனவும் நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டார்.