அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், வரும் 28-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என, மகளிர் சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு, சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் ஞானசேகரனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்து தவறானவை என்றும், எனவே தன்னை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் எனவும் ஞானசேகரன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஞானசேகரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் முகாந்திரமும், ஆதாரங்களும் உள்ளதால் அவரை வழக்கில் இருந்து விடுவிக்கக் கூடாது எனவும், மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் காவல்துறை சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
ஞானசேகரன் தரப்பில் ஆஜாரான வழக்கறிஞர், குற்றம் செய்ததற்கான முகாந்திரம் இல்லை எனவும், சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி ஞானசேகரன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் வரும் மே 28ஆம் தீர்ப்பு அளிக்கப்படும் எனவும் மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அறிவித்தார்.