ஆப்ரேஷன் சிந்தூர் தாக்குதலில் பாகிஸ்தானின் நூர்கான் விமானத் தளம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதை விட அதிக சேதம் அடைந்துள்ளதாக புதிய செயற்கைக்கோள் படங்கள் தெரிவிக்கின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த மே 7 ஆம் தேதி பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா நடத்திய ஆப்ரேஷன் சிந்தூருக்குப் பதிலடியாக மே 8, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் இந்தியாவின் முக்கிய நகரங்களை நோக்கி பாகிஸ்தான் ட்ரோன்களையும் ஏவுகணைகளையும் ஏவியது. பாகிஸ்தானின் செலுத்திய அனைத்து ட்ரோன்களையும், ஏவுகணைகளையும் இந்தியா துல்லியமாக இடைமறித்துத் தாக்கி அழித்தது.
குறிப்பாக மே பத்தாம் தேதி, 90 நிமிடங்களில், நூர் கான் விமானத் தளம் உட்பட அந்நாட்டின் முக்கிய 10 விமானத் தளங்களை இந்தியா தாக்கி அழித்தது. தாக்குதலைத் தாக்குப் பிடிக்க முடியாத பாகிஸ்தான் போரை நிறுத்த மன்றாடியது. இதனையடுத்து, தற்காலிகமாக ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா நிறுத்தியது.
நூர்கான் விமானத் தளம், பாகிஸ்தானில் ராவல்பிண்டியில் அமைந்துள்ளது. அதிமுக்கிய VIP போக்குவரத்து மற்றும் ராணுவத் தளவாடங்களுக்கான தளமாகவும் இந்த விமானத் தளம் செயல்பட்டு வந்தது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 25 கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவில் ராவல்பிண்டியில் அமைந்துள்ள நூர் கான் விமானப்படை தளம், பாகிஸ்தான் விமானப்படையின் முக்கிய உயர் மதிப்புள்ள தளமாகும்.
Saab 2000 Erieye வான்வழி முன்னெச்சரிக்கை அமைப்புகள், சி-130 டிரான்ஸ்போர்ட்டர்கள் மற்றும் IL-78 நடு-வான் எரிபொருள் நிரப்பும் விமானங்கள், ராணுவத் தளவாடங்கள், இந்த நூர்கான் விமானத் தளத்தில் தான் உள்ளன. கண்காணிப்பு மற்றும் செயல்பாட்டு ஒருங்கிணைப்புக்குப் பயன்படுத்தப்படும் இந்த தளத்தில் துருக்கியில் தயாரிக்கப்பட்ட Bayraktar TB2 மற்றும் உள்நாட்டுத் தயாரிப்பான பர்ராக் (Barraq) மற்றும் ஷாபர் (Shahpar) போன்ற ட்ரோன்கள் உள்ளன.
பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமையகத்துக்கு அருகில் அமைந்திருப்பதாலும், விமான இயக்க நடவடிக்கைகளுக்கான கட்டளை மையமாகச் செயல்படுவதாலும், நூர் கான் விமானத் தள தாக்குதல் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மே 11ம் தேதி அதிகாலையில் ராணுவத் தளபதி ஜெனரல் சையத் அசிம் முனீர் தன்னை எழுப்பியதாகவும், இந்திய பாலிஸ்டிக் ஏவுகணைகள் நூர் கான் உட்பட பல விமானத் தளங்களைத் தாக்கியதாகத் தமக்கு ராணுவத் தலைமை தளபதி அசிம் முனீர் தகவல் தெரிவித்ததாகப் பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் தெரிவித்திருந்தார்.
ஆப்ரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில், பாகிஸ்தானின் நூர் கான் விமானப்படைத் தளத்தில் இந்த மாத தொடக்கத்தில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள், சிறப்பு ராணுவ வாகனங்கள் போல் தோன்றும் இரண்டு டேங்கர் லாரிகள் அழிக்கப்பட்டதைக் காட்டின.
புவிசார் புலனாய்வு ஆய்வாளர் டேமியன் சைமன் தனது எக்ஸ் தளத்தில், நூர் கான் விமானத் தளத்தின் புதிய செயற்கைக்கோள் படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புதிய படங்கள்,தாக்குதல் நடந்த இடத்துக்கு அருகிலுள்ள ஒரு முழு வளாகமும் இடிந்துள்ளதைக் காட்டுகின்றன.
இந்த செயற்கைக் கோள் படங்கள், இந்திய விமானப்படையின் துல்லியமான தாக்குதலுக்குத் தக்க சான்றாக உள்ளது என்று ராணுவதுறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.