தென் மாவட்ட மக்களுக்குச் சீராகக் குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், திருநெல்வேலி, தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களுக்கு வழங்கப்படும் குடிநீரானது, உறைக்கிணறுகளுக்குப் பதிலாகத் தாமிரபரணி ஆற்றிலிருந்து எடுக்கப்படுவதால் மக்கள் அவதியுறுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.
உறைக்கிணறுகள் ஒப்பந்ததாரர்களின் மெத்தனப் போக்கால் முற்றிலுமாக சேதமடைந்திருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள தகவல், திராவிட மாதிரி அரசின் நிர்வாக குளறுபடிகளைத் தோலுரித்துக் காட்டுகிறது எனவும் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
புகார்களை மூடி மறைக்க முயலும் திமுக அரசு, அசுத்தமான குடிநீரைக் குடித்து மக்களின் உயிருக்குப் பாதிப்பு ஏற்பட்டால் முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளுமா எனக் கேள்வி எழுப்பியுள்ள நயினார் நாகேந்திரன், சில மாதங்களுக்கு முன்பு பல்லாவரத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரால் 3 பேர் உயிரிழந்த துயரத்திலிருந்து எதையும் கற்றுக் கொள்ளாமல் மக்களின் உயிரை திமுக அரசு அலட்சியப்படுத்துவது ஏன் எனவும் அவர் வினவியுள்ளார்.
உரிமைகளைப் பற்றி மேடைக்கு மேடை வகுப்பெடுக்கும் ஸ்டாலினுக்கு, குடிநீர் என்பது ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை என்பதும், அதை முறையாக வழங்குவது அரசின் அடிப்படை கடமை என்பதும் தெரியாதா என விமர்சித்துள்ள நயினார் நாகேந்திரன்,
இதுகுறித்து உயர்மட்ட விசாரணையைத் தொடங்குவதுடன், மக்களுக்குச் சுத்தமான குடிநீர் தங்கு தடையின்றி கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.