அலங்காநல்லூர் கீழக்கரை ஏறுதழுவுதல் அரங்கில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின்போது இருசக்கர வாகனத்தைத் தர தரவென இழுத்த சென்ற காளையால் பதற்றம் நிலவியது.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் அமைந்துள்ள ஏறுதழுவுதல் அரங்கத்தில் நாகமணி கிடா முட்டு நண்பர்கள் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 700 காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். வாடி வாசல் வழியாக சீறி பாய்ந்த காளைகளை வீரர்கள் தீரத்துடன் அடக்கினர். ஒரு சில காளைகள் வீரர்களுக்குப் போக்கு காட்டின.
இதனிடையே, ஜல்லிக்கட்டு போட்டியின்போது வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்ட காளையின் கயிறு அரங்கத்தின் முன்பு நின்று கொண்டிருந்த காவல் ரோந்து இருசக்கர வாகனத்தில் சிக்கியது. சிறிது தூரம் இருசக்கர வாகனத்தை இழுத்தவாறே சென்றதால் இருசக்கர வாகனம் முழுவதும் சேதம் அடைந்தது. உடனடியாக காளையின் உரிமையாளர் வாகனத்தில் சிக்கியிருந்த கயிற்றை அகற்றி காளையை அழைத்துச் சென்றார். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.
ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அண்டா, வெள்ளிக் காசு உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்ட நிலையில், ஏராளமான பார்வையாளர்கள் ஜல்லிக்கட்டு போட்டியை உற்சாகமாகக் கண்டு களித்தனர்.