இஸ்ரேலுக்கு உதவ நினைத்தால் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவோம் என ஈரான் எச்சரித்துள்ளது.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் மற்றும் ராணுவ முகாம்களைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஈரான் ராணுவ தலைமை தளபதி முகமது பகேரி, ஈரானிய புரட்சிப்படை தளபதி ஹொசைன் சலாமி, 9 அணுசக்தி விஞ்ஞானிகள் உட்பட பலர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேலின் டெல் அவிவ் நகரைக் குறிவைத்து ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் அயன் டோம் என்ற வான் பாதுகாப்பு அமைப்பை மீறி ஈரானின் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தின.
2-வது நாளாக ஈரான் தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரானுக்கு எதிராகப் பெரிய அளவில் படையைத் திரட்டும் பணியில் இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டுள்ளது. இரு நாடுகளுக்கிடையே தாக்குதல் வலுக்கும் நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதற்கிடையே இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் குரல் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில், இஸ்ரேல் மீதான தாக்குதலைத் தடுத்தாலோ, அவர்களுக்கு உதவினாலோ அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கப்பல்கள் மற்றும் பிராந்திய முகாம்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவோம் என ஈரான் எச்சரித்துள்ளது.