பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டோரின் அடையாளங்களை வெளியிடக் கூடாது என்ற உச்சநீதிமன்ற ஆணையை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழகக் காவல்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவான பாலியல் வழக்கின் விசாரணையை விரைந்து முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி குற்றம் சாட்டப்பட்ட நபர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவானது நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்கள் இருப்பது தெரியவந்தது.
பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிடக் கூடாது என்ற உச்சநீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, இதனை அதிகாரிகள் பின்பற்றுவதே இல்லை என அதிருப்தி தெரிவித்தார்.
இதுதொடர்பாக காவல்துறையினருக்கு அறிவுறுத்த டிஜிபி, மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதி, உச்சநீதிமன்ற ஆணையை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.
















