அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானின் ஃபோர்டோவ் அணுசக்தி நிலையம் முழுமையாக அழிக்கப்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் – ஈரான் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது. இதனிடையே அணுசக்தி திட்டத்தைக் கைவிடுமாறு ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து வந்தது.
ஆனால் அதற்கு ஈரான் செவிசாய்க்காத நிலையில், இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்காவும் போரில் இறங்கியுள்ளது. அதன்படி, ஈரானின் போர்டோவ், நடான்ஸ், எஸ்பஹான் ஆகிய பகுதிகளில் உள்ள அணு சக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
ஆப்ரேஷன் மிட்நைட் ஹேமர் என்ற பெயரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. அமெரிக்க விமானப் படையின் B-2 ரக போர் விமானங்கள் மலைக்கு அடியில் உள்ள ஃபோர்டோவ் அணுசக்தி நிலையத்தைக் குறிவைத்து GBU-57 பங்ஹர் ரக வெடிகுண்டுகளை வீசின.
அவை 90 மீட்டர் ஆழத்துக்கு பூமியைத் துளைத்துச் சென்று வெடித்துச் சிதறின. இந்நிலையில் அமெரிக்காவின் தாக்குதலில் ஃபோர்டோவ் அணுசக்தி நிலையம் சேதம் அடைந்திருந்தாலும் முழுமையாக அழிக்கப்படவில்லை என இஸ்ரேல் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.