முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு காட்டுநாயக்கன் சமூகத்தை வஞ்சிப்பது ஏன்? என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள பரமன்குறிச்சி-சமத்துவபுரம் பகுதியில் வசித்து வரும் முத்துக்குமார் – திருமணி தம்பதியினரின் மகனான செல்வன். முத்துக்கிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டது மிகுந்த வேதனையளிக்கிறது.
பரமன்குறிச்சியில் CSI அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன் முத்துக்கிருஷ்ணனுக்கு சாதிச்சான்றிதழ் கேட்டு பள்ளி நிர்வாகம் அழுத்தம் கொடுத்ததாக அவரது குடும்பத்தார் கூறுகிறார்கள்.
மாணவரோ காட்டுநாயக்கன் பிரிவை சேர்ந்தவர் என்பதால் சாதிச்சான்றிதழை பெறுவதில் சிக்கல் இருந்துள்ளது. நீதிமன்ற வழிகாட்டுதல் இருந்தும், எத்தனையோ சட்டப் போராட்டங்களை நடத்தியும் காட்டுநாயக்கன் சமூகத்தினர் சாதிச்சான்றிதழைப் பெறுவது பெரும் போராட்டமாகவே மாறியுள்ளது.
இதனால், 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளை இந்த சமூக மாணவர்கள் தாண்டுவதே இயலாத காரியமாக மாறி வருகிறது. அதனாலேயே உயர்கல்வி இந்த சமூக மக்களுக்கு எட்டாக்கனியாக இருப்பது வேதனையான விஷயம்.
சமூகநீதி அரசென்று மூச்சுக்கு முன்னூறு முறை முழங்கும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு இந்த காட்டுநாயக்கன் சமூகத்தை வஞ்சிப்பது ஏன்? என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவன் முத்துக்கிருஷ்ணன் தன் சாவுக்கு காரணம் என்று பள்ளி தலைமையாசிரியர் உட்பட 4 பேரை எழுதி வைத்துள்ளதாக காவல்துறை கூறுகிறது.
இதன் விசாரணை எந்த அளவில் உள்ளது என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். பள்ளி நிர்வாகம், பியூலா, மேரி, தலைமையாசிரியர் சத்யா மற்றும் வளர்மதி ஆகிய நான்கு ஆசிரியர்களை சஸ்பெண்ட் மட்டும் செய்துவிட்டால் போதுமென நினைப்பது அநீதி.
மாணவனின் தற்கொலைக்கு சாதிச்சான்றிதழ் கேட்டு துன்புறுத்தியதே காரணமென்றால் மாணவனின் மரணத்திற்கு பாதி பொறுப்பை இந்த அரசும் சுமக்க வேண்டுமென்பதை தார்மீக ரீதியாக யாரும் மறுக்க முடியாது.
அதே சமயம் அப்படிப்பட்ட அழுத்தத்தை கொடுத்தவர்கள் சட்டத்தின் முன்னால் நிறுத்த வேண்டுமென்பதை தமிழக மக்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். மறைந்த மாணவன் முத்துக்கிருஷ்ணனின் ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை வேண்டிக் கொள்கிறேன். மேலும் அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு நயினார் நாகேந்திரன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.