விளைச்சல் பாதிப்பு, உரிய விலையின்மை காரணத்தினால் பொள்ளாச்சி பகுதியில் தென்னை சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தளங்களில் முதன்மையாகத் திகழும் பொள்ளாச்சியில் தென்னை சாகுபடியே பிரதான விவசாயமாக அமைந்திருக்கிறது. பரம்பிகுளம் ஆழியாறு உள்ளிட்ட பாசனத் திட்டங்களின் வாயிலாக மட்டும் சுமார் 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தென்னை நகரம் எனப் பெயர்பெற்ற பொள்ளாச்சியில் தென்னை விவசாயமும் தென்னை சார்ந்த தொழில்களும் படிப்படியாக அழிவுப்பாதையை நோக்கிச் செல்லும் சூழல் உருவாகியுள்ளது.
நீண்ட காலப் பயிர்களில் ஒன்றாகக் கருதப்படும் தென்னை, பயிரப்பட்ட ஐந்து ஆண்டுகளிலிருந்தே விவசாயிகளுக்குக் கைகொடுக்கத் தொடங்கிவிடுகிறது. தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் இளநீர் உடலுக்குக் குளிர்ச்சியை ஏற்படுத்துவதோடு பல்வேறு மருந்துகளுக்கும் பயன்படுகிறது. மேலும் தென்னையிலிருந்து பெறப்படும் மட்டை, ஓலை, தென்னங்குச்சிகள் ஆகியவை வணிக ரீதியாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
சந்தைகளில் கிடைக்கும் தேங்காய் எண்ணெய்யை விடப் பாரம்பரிய முறையில் செக்கில் ஆட்டப்படும் தேங்காய் எண்ணெய் வகைகளுக்கும் மக்கள் மத்தியில் தனி வரவேற்பும் உண்டு. இத்தகைய அளவில்லா பயன் தரக்கூடிய தென்னை கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நோய் தாக்குதலுக்கு உள்ளாகி விளைச்சல் பாதித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்
தேங்காய் விளைச்சலின்மையால் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாரம்பரியமாக நடைபெற்று வந்த செக்காட்டும் தொழில் தற்போது முடங்கிக் கிடக்கிறது. செக்காட்டும் தொழிலையே நம்பியிருந்த தொழிலாளர்கள் வேறு வேலையை நாடிச் செல்ல தொடங்கியுள்ளனர்.
விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதோடு, கஷ்டப்பட்டு விளைவிக்கப்படும் தேங்காய்களுக்கு உரிய விலையும் கிடைக்காத காரணத்தினால் பெரும்பாலான விவசாயிகள் தென்னை சாகுபடியைக் கைவிடும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தென்னை விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் தேங்காய்களை அரசே கொள்முதல் செய்வதோடு, நியாயவிலைக்கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யும் திட்டத்தைத் தொடங்க வேண்டும் எனத் தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.