சென்னையில் மாதம் ஒன்றரை லட்ச ரூபாய் சம்பளத்தை உதறித் தள்ளிவிட்டு இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு வருகிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த ரோபோடிக் எஞ்சினியர். யார் அந்த ரோபோடிக் எஞ்சினியர். அவரின் மனமாற்றத்திற்குக் காரணம் என்ன என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் தாலுக்காக ஊரணி புரத்தைச் சேர்ந்த ரோபோடிக் எஞ்சினியர் தான் இந்த தேவேந்திரன். விவசாயத்தின் மீதிருந்த அதீதப்பற்றால் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒன்றரை லட்ச ரூபாய் ஊதியத்தை உதறித் தள்ளிவிட்டு தஞ்சாவூருக்குத் திரும்பிய தேவேந்திரன் தற்போது இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார். நம்மாழ்வாரையே தனது வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட தேவேந்திரன் தான் மேற்கொண்டுவரும் இயற்கை விவசாயத்தின் மூலம் பலருக்கும் முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறார்.
விவசாயத்தை விளையாட்டாக மேற்கொள்வோம் என்ற நம்மாழ்வாரின் கூற்றையே அடிப்படை நெறியாகக் கொண்டிருக்கும் தேவேந்திரன், சோழர்கால பாரம்பரிய தற்காலிக கலையான குத்து வரிசை, அடிமுறை உள்ளிட்ட தற்காப்புக் கலைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் பயிற்சி பள்ளி ஒன்றையும் உருவாக்கியுள்ளார்.
பாரம்பரிய உணவை உட்கொள்ள வேண்டும், செல்போன் பயன்படுத்தக் கூடாது என்பது தான் இக்கலையைக் கற்க முக்கிய கோட்பாடாகவும் தேவேந்திரன் வைத்திருக்கிறார். சோழர்கால தற்காப்புக் கலைகளைப் பயில்வதன் மூலமும், சத்தான பாரம்பரியமிக்க உணவை உண்பதன் மூலமும் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க முடிவதாகப் பயிற்சிபெறும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
நம்மாழ்வாரின் வார்த்தைகளையே வாழ்வியல் தத்துவமாகப் பின்பற்றி இயற்கை விவசாயத்தில் முன்னோடியாகத் திகழ்வதோடு, இளைய தலைமுறை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் தற்காப்புக் கலைகளையும் கற்றுத் தரும் தேவேந்திரன் அப்பகுதி மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளார்.