தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சின்னகாமன்பட்டி பகுதியில் இயங்கி வந்த தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளார்கள் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியை தருகிறது.
தமிழக அரசின் நிர்வாக கவனிப்பின்மை காரணமாக, சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.
பட்டாசு ஆலை நடத்துகிற தனியார் நிறுவனங்கள், முறையான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டு இயங்குகின்றனவா என்பதையும், மின்சாரம் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றை கையாளும் முறைகளையும் அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமென்பதை நீண்ட காலமாக நாம் வலியுறுத்தி வருகிறோம்.
தற்போது ஏற்பட்டுள்ள இந்த விபத்திற்கு பிறகாவது, தனியார் பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு, மாவட்ட அளவிலான சிறப்புக்குழு நியமிக்க வேண்டுமென்றும், உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்தோரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடை வழங்க வேண்டுமென்றும் தமிழக அரசை எல்.முருகன் வலியுறுத்தி உள்ளார்.
மேலும், உயிரிழந்தோர் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எல்.முருகன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.