ஈரோடு தொப்பம்பாளையம் பகுதிக்கு முறையாகக் குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அருகே தொப்பம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்த பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
ஆனால், அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், புளியம்பட்டி – பவானிசாகர் சாலையில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்துத் தகவலறிந்து வந்த எம்எல்ஏ சுந்தரம் மற்றும் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, முறையாகக் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
இதனைத் தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.