பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரவையால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து டெல்லியில் பேசிய அவர், வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்திற்கு ஒரு லட்சத்து 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பரமக்குடி – ராமநாதபுரம் இடையே ஆயிரத்து 853 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4 வழிச்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், 46 புள்ளி 7 கிலோ மீட்டர் தூரத்திற்குத் தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணிக்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியிருப்பதாகவும் கூறினார்.
விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் கேலோ பாரத் நிதி 2025 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாகத் தெரிவித்த அஷ்வினி வைஷ்ணவ், இத்திட்டத்தின் வாயிலாகக் கிராமப்புறம் தொடங்கி தேசிய மற்றும் சர்வதேச அளவில் விளையாட்டுக்கான முழு கட்டமைப்புகள் உருவாக்கப்படும் என உறுதியளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் , ஆராய்ச்சி, புதுமை மற்றும் மேம்பாட்டுத் துறைக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.