சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினருடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செல்போன் வாயிலாகப் பேசி ஆறுதல் தெரிவித்தார்.
மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் என்பவர், பெண்ணின் நகை மாயமான புகாரின் பேரில் காவலர்கள் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதில் சம்பந்தப்பட்ட 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை சிபிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மதுரை 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷூம் விசாரணையைத் தொடங்கிய நிலையில், வரும் 8-ம் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்தினருடன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செல்போன் வாயிலாகப் பேசினார். அப்போது சில மனித மிருகங்கள் தாக்கியதால் அஜித்குமார் இறந்து விட்டதாகவும், தைரியமாக இருக்குமாறும் அவரின் தாயாருக்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல் தெரிவித்தார்.
மேலும், அஜித்குமாரின் மரணத்திற்கு நீதி கிடைக்கும்வரை அதிமுக துணை நிற்கும் எனவும் எடப்பாடி பழனிசாமி உறுதி கூறினார்.