விவசாயத்தில் ஏற்படும் தொடர் நஷ்டத்தைத் தவிர்க்க டிராகன் புரூட்ஸ் எனும் மருத்துவ குணமிக்க பழத்தைச் சாகுபடி செய்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் ஓசூரைச் சேர்ந்த விவசாயி கோபி. குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டும் டிராகன் பழ விவசாயம் குறித்தும் அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
ஓசூர் அருகே உள்ள உத்தனப்பள்ளியைச் சேர்ந்த விவசாயி ஸ்ரீராமுலுவுக்கு ராகி, அவரை, துவரை உள்ளிட்ட பயிர்களைச் சாகுபடி செய்வதுதான் பிரதான தொழிலாக இருந்துவந்துள்ளது.
தண்ணீர் பற்றாக்குறை, விளைச்சல் பாதிப்பு, உரிய விலையின்மை என அடுத்தடுத்து நெருக்கடிகளால் பெரும் நஷ்டத்தையே ஸ்ரீராமுலு சந்தித்து வந்துள்ளார். தந்தையின் நிலையைப் பார்த்து மனமுடைந்த மகன் கோபி, டிராகன் எனும் மருத்துவ குணம் கொண்ட பழங்களைச் சாகுபடி செய்யும் முயற்சியில் இறங்கினார். தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் குறைவான செலவில் டிராகன் பழங்கள் விவசாயத்தை மேற்கொண்டதால் தனக்கு அதிகளவிலான லாபம் கிடைத்திருப்பதாகவும் கோபி தெரிவிக்கிறார்.
கோபியும் அவரது தந்தை ஸ்ரீராமுலும் இணைந்து கர்நாடகம், குஜராத், ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு நேரில் சென்று டிராகன் செடிகளைப் பயிரிடும் முறைகள் குறித்து போதுமான பயிற்சியைப் பெற்றுள்ளனர். முதலில் ஒரு ஏக்கர் பரப்பளவில் 4.5 லட்ச ரூபாய் செலவு செய்து பயிரிட்ட நிலையில், அதிக லாபம் கிடைத்ததையடுத்து அதிகளவில் பயிரிடத் தொடங்கியுள்ளனர்.
புற்றுநோய் உள்ளிட்ட 42 வகையிலான நோய்களுக்கு மருந்தாகப் பயன்படும் ட்ராகன் பழங்களுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. 25 முதல் 30 ஆண்டுகள் வரை ஆயுள் கொண்ட டிராகன் செடிகளில் ஒவ்வொரு ஆண்டும் அறுவடை செய்து அதன் மூலம் லாபம் பெற்றுவரும் நிலையில் வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பூச்சிமருந்தோ, ரசாயன உரங்களையோ பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி விவசாயம் மேற்கொண்டுவருவதாகவும் கோபி தெரிவிக்கின்றார். ஒரே சாகுபடியை மேற்கொண்டு அடுத்தடுத்து நஷ்டங்களைச் சந்திக்கும் விவசாயிகளுக்கு மாற்று விவசாயத்திற்கான புதிய வழியைக் கண்டுபிடித்துக் கொடுத்திருக்கும் ஓசூரைச் சேர்ந்த விவசாயி கோபிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.