புதுச்சேரியில் 25 சதவீதம் கேளிக்கை வரி, 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஆகஸ்டு மாதம் முதல் திரைப்படங்கள் வெளியிடப் போவதில்லை எனத் தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் தியேட்டர் டிக்கெட்டுக்கு ஜிஎஸ்டி வரி மற்றும் திரைப்படங்களுக்கு மாநில அரசின் கேளிக்கை வரி என்ற இரட்டை வரி விதிப்பு முறை தற்போது வரை அமலில் உள்ளது.
இந்நிலையில் 100 ரூபாய்க்கும் குறைவான சினிமா டிக்கெட்டுக்கு 12 சதவீதமும், 100 ரூபாய்க்கும் மேலான டிக்கெட்டுக்கு 18 சதவீதமும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. மேலும் கேளிக்கை வரி 25 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
இதனைக் குறைக்க வேண்டுமென தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் முதலமைச்சர் ரங்கசாமியைச் சந்தித்து முறையிட்டனர்.
ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள் அடுத்த மாதம் முதல் புதுச்சேரிக்குத் திரைப்படங்களை வெளியிடப் போவதில்லை என முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.