கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியில் 13 வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவத்தில் இளம்பெண் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாவனட்டியை சேர்ந்த சிவராஜ் என்பவரது 13 வயது மகன் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் விளையாடச் சென்ற சிறுவன் வீடு திரும்பாததால் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
தொடர்ந்து சிறுவனைக் கண்டுபிடிக்க போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடம் சென்ற போலீசார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இதனிடையே தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள வனப்பகுதியில் சிறுவன் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்குக் கொண்டு செல்ல முயன்றனர்.
ஆனால் சிறுவனின் உறவினர்கள் உடலை கொண்டு செல்ல கூடாது எனக்கூறி, உடலை எடுத்து வந்து அஞ்செட்டியில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த போலீசார், சிறுவனின் உடலை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தொடர்ந்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், சிறுவனை அதே கிராமத்தை சேர்ந்த மாதேவன் மற்றும் கர்நாடக மாநிலம் உனசனஅள்ளி பகுதியைச் சேர்ந்த மாதேவன் ஆகியோர் கடத்தி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களைக் கைது செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் மாவனட்டி மாதேவன் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் பழகிவந்தது தெரியவந்தது.
அந்த பெண்ணுடன் மாதேவன் தனிமையில் இருந்ததை சிறுவன் பார்த்ததாகவும், இதனால் சிறுவனைக் கொலை செய்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.
மேலும் சிறுவனின் வாயில் பீரை ஊற்றி மயக்கமடையச் செய்து கொடூரமாகக் கொலை செய்ததும் விசாரணையின் மூலம் தெரியவந்தது. மேலும் இந்த வழக்கில் மாவனட்டி கிராமத்தைச் சேர்ந்த ரதி என்ற இளம் பெண்ணையும் போலீசார் கைது செய்தனர்.