இலங்கையின் கொழும்பு கப்பல் கட்டும் மற்றும் பழுது பார்க்கும் தளத்தை இந்தியாவின் பொதுத் துறை நிறுவனமான Mazagon Dock Shipbuilders என்ற நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. ஒரு இந்தியக் கப்பல் கட்டும் நிறுவனம், வெளிநாட்டுக் கப்பல் கட்டும் நிறுவனத்தை வாங்குவது இதுவே முதல்முறையாகும். இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் இந்தியாவின் மிக முக்கிய நடவடிக்கை குறித்து ஒரு செய்தி தொகுப்பு.
Mazagon Dock Shipbuilders இந்தியாவின் மிகப்பெரிய போர்க்கப்பல் கட்டுமான நிறுவனமாகும். 1934ஆம் ஆண்டு பொதுத் துறை நிறுவனமான இதன் தலைமையிடம் மும்பையில் உள்ளது. இதன் தலைவராக, முன்னாள் இந்தியக் கடற்படை கேப்டன் ஜக்மோகன் உள்ளார்.
1,29,254 கோடி ரூபாய் சந்தை மூலதனத்துடன் வெற்றிகரமாகச் செயல்படும் இந்த நிறுவனத்தின் வருவாய் சுமார் 9,660 கோடி ரூபாய் ஆகும்.
உலகின் மிகப்பெரிய துறைமுகங்களில் ஒன்றான கொழும்பு துறைமுகத்தில் கொழும்பு கப்பல் கட்டும் தளம் அமைந்துள்ளது. இது, இலங்கை அரசின் முன்னணி கப்பல் கட்டும் மற்றும் கப்பல் பழுதுபார்க்கும் நிறுவனமாகும். உள் வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் முதல் மேம்பட்ட பழுது மற்றும் எஃகு உற்பத்தி வரை ஒருங்கிணைந்த கப்பல் சேவைகளை வழங்கும் இலங்கையின் ஒரே கப்பல் கட்டும் தளம் இதுவாகும்.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் இந்த கப்பல் கட்டும் நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும் 200-க்கும் மேற்பட்ட கப்பல்களைப் பழுது பார்க்கிறது. அதாவது, 1, 25,000 மெட்ரிக் டன் அளவிலான கப்பல்களைக் கையாளுகிறது. நார்வே, பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜப்பான் மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளில் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள இந்த நிறுவனம், பல்வேறு அரசு ஒப்பந்தங்களையும் பெற்றுள்ளது.
கடலுக்கு அடியில் கேபிள்-பதிக்கும் கப்பல்கள், டேங்கர்கள் மற்றும் கடலோர காவல்படை கப்பல்கள் கட்டுமானத்துக்குப் பெயர் பெற்ற நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கப்பல் பழுதுபார்க்கும் துறையில், கச்சா எண்ணெய், தயாரிப்பு, ரசாயனம் மற்றும் LPG டேங்கர்கள் உட்பட அனைத்து வகையான டேங்கர்களுக்கும் இது முழு அளவிலான பராமரிப்பு மற்றும் பழுது பார்க்கும் சேவைகளை வழங்குகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே மோசமான நிதி நிலைமையில் இருந்த இந்த கப்பல் கட்டும் நிறுவனம்,கடந்த ஆண்டு சுமார் 70 கோடி ரூபாய்க்கும் மேல் நஷ்டத்தைச் சந்தித்தது. கொழும்பு கப்பல் கட்டும் நிறுவனத்தின் பங்குகளில், இலங்கை ஊழியர் வருங்கால வைப்பு நிதி 16 சதவீதத்தையும், அதன் காப்பீட்டு நிதி சுமார் 9 சதவீதத்தையும், துறைமுக அதிகாரசபை ஐந்து சதவீதத்தையும் கொண்டுள்ளது. மீதமுள்ள பங்குகளில் அதிகமான பங்குகளை Onomichi Dockyard நிறுவனம் வைத்துள்ளது.
இந்நிலையில், Onomichi Dockyard யிடம் இருந்த கொழும்பு கப்பல் கட்டும் நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை இந்தியாவின் Mazagon Dock Shipbuilders நிறுவனம் 452 கோடி ரூபாய் மதிப்பில் கையகப்படுத்தியுள்ளது. நாட்டின் அமிர்த கால இலட்சியத்தின் ஒருபகுதியாக எடுக்கப்பட்டுள்ள இந்த ஒப்பந்த நடவடிக்கை இந்தியாவின் கடல்சார் செல்வாக்கை வலுப்படுத்தியுள்ளது. இனி, கொழும்பு கப்பல் நிறுவனம், Mazagon Dock Shipbuilders நிறுவனத்தின் துணை நிறுவனமாகச் செயல்படப் போகிறது.
இது வெறும் கையகப்படுத்தல் மட்டுமல்ல, ஒரு நுழைவாயில். இந்த நடவடிக்கை தெற்காசியாவில் மட்டுமல்ல உலகளாவிய கப்பல் கட்டும் தளமாக Mazagon மாறுவதற்கான அடித்தளம் என்று அதன் தலைவர் கேப்டன் ஜக்மோகன் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, இலங்கையின் ( Hambantota International Port Group ) ஹம்பாந்தோட்டா சர்வதேச துறைமுகக் குழுவில் 85 சதவீத பங்குகளைச் சீனா வைத்திருக்கிறது. மேலும், (Hambantota International Port) ஹம்பாந்தோட்டா சர்வதேச துறைமுகத்தை 99 ஆண்டுக் குத்தகைக்கும் சீனா எடுத்துள்ளது.
கூடுதலாக, கொழும்பு கப்பல் கட்டும் தளத்தில் உள்ள இரண்டு புதிய முனையங்களில், ஒன்றையும் சீனா கையகப் படுத்தியுள்ளது. இன்னொரு முனையமான கொழும்பு மேற்கு சர்வதேச கொள்கலன் முனையத்தை இந்தியாவின் அதானி நிறுவனம், 2021 ஆம் ஆண்டு முதல் 35 ஆண்டுக்கால கட்டுமான-செயல்பாட்டு-பரிமாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் இந்த முனையம் செயல்படத் தொடங்கியது.
இந்நிலையில், இந்தியா கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்குவது மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. தனது கடல் ஆதிக்க எல்லையை விரிவுபடுத்துதல், கடல் பாதைகளைப் பாதுகாத்தல் மற்றும் சீனாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான முக்கிய கடல்சார் வியூகமாகும்.
இந்தியா ஏற்கனவே மாலத்தீவுகள், சீஷெல்ஸ் மற்றும் மொரீஷியஸில் கடலோர ரேடார் சங்கிலிகளை உருவாக்குவதில் மும்முரமாக உள்ளது. இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் கூட்டுக் கடல் எல்லைகள் கண்காணிப்பு திட்டங்களைச் செயல்படுத்த முயற்சித்து வருகிறது.
கொழும்பு கப்பல் கட்டும் தளத்தைக் கைப்பற்றிய நடவடிக்கையின் மூலம், இந்தியப் பெருங்கடல் பகுதியில் தன்னுடைய ஆளுமையை இந்தியா நிலைநிறுத்தி உள்ளது. சீனாவின் கடற்படை இப்பகுதியில் பரவியுள்ள நிலையில், இந்தியத் தேசியப் பாதுகாப்புக்கு இது ஒரு முக்கிய வெற்றியாகும்.