விவசாயிகளுடன் தவெக துணை நிற்கும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், தவெக செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது, தவெக-வின் முதலமைச்சர் வேட்பாளர் விஜய், தவெக தலைமையில்தான் கூட்டணி, கூட்டணி குறித்து முடிவெடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் மேடையில் பேசிய தவெக தலைவர் விஜய், விவசாயிகளுடன் தவெக துணை நிற்கும் என்று தெரிவித்தார். மேலும், பரந்தூர் விமான நிலைய அரசாணையை பார்க்கும்போது, விவசாயிகளின் கண்ணீரை துடைக்க வேண்டிய அரசு, அவர்களுடைய கண்களை குத்துகிற மாதிரி இருப்பதாக குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய விஜய், எதிர்க்கட்சியாக இருக்கும்போது மட்டும்தான் மக்கள் மீது உங்களுக்கு அக்கறை இருக்குமா? என்றும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு, அந்த இடத்தில்தான் விமான நிலையத்தை கட்ட வேண்டுமா? எனவும் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினர்.
மேலும், பரந்தூர் மக்களை சந்தித்து, அந்த இடத்தில் விமான நிலையம் வராது என முதலமைச்சர் உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அப்பகுதி மக்களையும், விவசாயிகளையும் தலைமை செயலகத்திற்கு அழைத்து வருவேன் எனவும் விஜய் எச்சரித்தார்.