G7 நாடுகளுக்கு மாற்றாக, வளரும் உலகின் முக்கிய அமைப்பாகக் கருதப்படும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்கமாட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரிக்ஸ் உச்சிமாநாட்டை ஒருபோதும் தவறவிடாத ஜி ஜின்பிங், இந்த ஆண்டு ஏன் புறக்கணித்தார்? இது சீனாவின் ராஜ தந்திரமா? சீன அரசியலில் ஜி ஜின்பிங் கட்டுப்பாட்டை இழந்து விட்டாரா? என்பது பற்றி இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
மேற்கத்திய ஆதிக்கத்தைச் சமாளிக்கும் வகையில்,ரஷ்யா,சீனா,இந்தியா பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் பிரிக்ஸ் அமைப்பை 2009 ஆம் ஆண்டு தொடங்கின. கடந்த ஆண்டில், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், எத்தியோப்பியா, இந்தோனேசியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளும் பிரிக்ஸ் அமைப்பில் இணைந்துள்ளன.
பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா அதிக வரி விதித்துள்ளது. வர்த்தக வரி தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா காலக் கெடு எதுவும் விதிக்காத நிலையில் பிரேசிலில் நடக்கும் 17வது பிரிக்ஸ் உச்சி மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த உச்சிமாநாடு, அமைதியை மேம்படுத்துவதையும், ஜி-7 போன்ற உலகளாவிய அமைப்புகளைச் சீர்திருத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதில் பங்கேற்கும் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வர்த்தகக் கொள்கைகளுக்குக் கண்டனம் தெரிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜீ ஜின்பிங், ஈரான் அதிபர் மசூத் பெஸ்ஷ்கியன் மற்றும் எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி (Abdel Fattah el-Sisi) ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள நிலையில், ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராகச் சர்வதேச நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. அதனால், புதின் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வதைத் தவிர்த்து வருகிறார். இந்த உச்சி மாநாட்டில் காணொளி மூலம் கலந்து கொள்கிறார்.
இதனிடையே, எந்தக் காரணமும் சொல்லாமல், ஜி ஜின்பிங் பிரிக்ஸ் உச்சிமாநாட்டைப் புறக்கணித்திருப்பது பல்வேறு சந்தேகங்களை உருவாக்கி உள்ளது. பெருநிறுவனத் துறையைக் கட்டுப்படுத்த அரசு எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. கோவிட் பரவல் காலத்தில், சீன நகரங்களை மூடும் பூஜ்ஜிய கோவிட் கொள்கை தோல்வியடைந்தது. இதன் காரணமாக சீனாவில் தொழில்துறை முடங்கியது.
அமெரிக்காவுடனான வர்த்தகப் போர், சீனாவின் 440 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஏற்றுமதியை சீர்குலைத்துள்ளது. தொடர்ச்சியான மந்தநிலை மற்றும் வீட்டுவசதி சந்தையின் சரிவு என சீனாவின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடைந்துள்ளது. சில மாதங்களாகவே வெளிநாடு வாழ் சீனர்களின் அதிருப்தி, சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குள் அதிகாரப் போட்டியை உருவாக்கியுள்ளதாகத் தெரியவருகிறது.
கடந்த ஜூன் 30ம் தேதி, ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 24 உறுப்பினர்களைக் கொண்ட சக்திவாய்ந்த அரசியல் குழுவின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கட்சியில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய விதிமுறைகளை மதிப்பாய்வு செய்ததாகச் சீன அரசு நடத்தும் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரு காலத்தில் முழுமையான கட்டுப்பாட்டை வைத்திருந்த சீன அதிபர் ஜி ஜின்பிங், சீனாவின் இரண்டாவது மிகச் சக்திவாய்ந்த மனிதராகக் காணப்பட்ட ஜெனரல் He Weidong உட்படப் பல உயர் தளபதிகளைப் பதவி நீக்கம் செய்தார்.
2027ம் ஆண்டுக்குள் சீன மக்கள் ராணுவம் ஒரு போருக்குத் தயாராக இருக்கவேண்டும் என்ற சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் உத்தரவை, பெரும்பாலான ராணுவத் தளபதிகள் ஏற்றுக் கொள்ளத் தயங்குகின்றனர்.
1979ம் ஆண்டுக்குப் பிறகு சீனா, முழு அளவிலான போரில் ஈடுபடவில்லை. உலகின் பெரிய ராணுவம் என்றாலும், அதன் ஆற்றல் போர்க்களத்தில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. தைவானுடனான போரில் தோல்வி என்றால், சர்வதேச அளவில் சீனாவின் வலிமையான நாடு என்ற பிம்பம் உடைந்து போகும். அதனாலேயே, சீன இராணுவத்திலும், சீன கம்யூனிஸ்ட் கட்சியிலும் அதிபருக்கு எதிரான மனநிலை உருவாகியுள்ளது.
மேலும், பல பில்லியன் டாலர் மதிப்புள்ள சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தைப் பிரேசில் ஆதரிக்கவில்லை. இந்தியாவுக்குப் பிறகு பிரிக்ஸ் நாடுகளில் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தில் சேராத இரண்டாவது நாடு பிரேசில் ஆகும்.
அமெரிக்காவுக்கு எதிராகவும், தனக்கு ஆதரவாகவும் பிரிக்ஸ் நாடுகள் ஒத்துழைக்காது என்று உணர்ந்த சீன அதிபர், எரிசக்தி கட்டுப்பாட்டை வலுப்படுத்துவதிலும், வர்த்தகத்தில் சீனாவின் டிஜிட்டல் நாணயத்தை ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்துவார் என்று கூறப்படுகிறது.
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், கலந்து கொள்ளாததன் மூலம், அமெரிக்காவுக்கு மாற்றாகச் சீனாவை முன்னிறுத்தும் வாய்ப்பை சீன அதிபர் இழந்துள்ளார். மேலும், உலகளாவிய தெற்கிலும் சீனா தன் முக்கியத்துவத்தை இழக்கும் என்றும் கூறப்படுகிறது.