மதுரையில் கஞ்சா விற்பனை குறித்து புகார் அளித்ததால் தந்தை, மகன் தாக்கப்பட்டதாக வீடியோ வெளியான விவகாரத்துக்கு, சொத்து பிரச்சனையே காரணம் எனத் தெரியவந்துள்ளது.
மதுரை சோலை அழகாபுரத்தைச் சேர்ந்த பாண்டி, அவரது மகன் கார்த்திக் ஆகியோர், கஞ்சா விற்பனை குறித்து போலீசில் புகாரளித்ததால் அரிவாளால் தாக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியானது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஜெய்ஹிந்த்புரம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தாக்குதலுக்குச் சொத்துப் பிரச்சனையே காரணம் என்பதும், காயமடைந்தவர்களின் உறவினர்களான நாகரத்தினத்தின் தூண்டுதலின் பேரில் கூலியாட்கள் மூலமாகத் தாக்குதல் நடத்தியதும் தெரியவந்தது.
இதனையடுத்து பயங்கர ஆயுதங்களால் தாக்குதல் நடத்திய 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரைத் தேடி வருகின்றனர்.