ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானை முட்டாளாக்க, கண்ணுக்குப் புலப்படாத சிறந்த போர் திறன்களை இந்தியா பயன்படுத்தியதாக முன்னாள் அமெரிக்கப் போர் விமானி (Ryan Bodenheimer) ரியான் போடன்ஹைமர் பாராட்டியுள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்ரேஷன் சிந்துார் நடவடிக்கையில், இந்திய வான்வெளியை விட்டு வெளியேறாமல் துல்லியமான தாக்குதல்களை இந்திய விமானப்படை நடத்தியது. ஆப்ரேஷன் சிந்தூரில் முதன்முறையாக ரஃபேல் போர் விமானங்களை இந்திய விமானப்படை பயன்படுத்தியது. SCALP குரூஸ் மற்றும் ஹேமர் ஏவுகணைகளுடன் இந்தியாவின் ரஃபேல் விமானங்கள் போரில் வானத்தில் ஆதிக்கம் செலுத்தி, பாகிஸ்தானைக் கதி கலங்க வைத்தது.
இதற்கிடையே, மூன்று ரஃபேல் விமானங்கள் உட்பட ஐந்து இந்தியப் போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகப் பாகிஸ்தான் கூறியது. ரஃபேல் விமானங்களைத் தயாரிக்கும் டஸால்ட் ஏவியேஷனின் தலைமை நிர்வாக அதிகரி எரிக் ட்ராப்பியர், ரஃபேல் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகப் பாகிஸ்தான் கூறியதை முற்றிலுமாக நிராகரித்துள்ளார்.
வான்வெளியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் ஒரு ரபேல் விமானத்தை இந்தியா இழந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் அனில் சவுகானும், ரஃபேல் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகப் பாகிஸ்தான் சொல்வது முற்றிலும் தவறானவை என்று கூறியுள்ளார்.
ஆப்ரேஷன் சிந்தூரில், ரஃபேல் விமானங்கள் மோசமாகச் செயல்பட்டதாகச் சீன தூதரக பாதுகாப்பு அதிகாரிகள் பொய் செய்தியைப் பரப்பியதாகவும், ரஃபேல் விமானங்களின் சிதைந்த பாகங்கள் என்று வந்தவை AI மூலம் உருவாக்கப் பட்டவை என்று பிரான்ஸ் உளவுத் துறை தெரிவித்துள்ளது.
ரஃபேலுக்கு பதிலாகச் சீன தயாரிப்பு போர் விமானங்களை வாங்குமாறு பிற நாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகளைச் சீன தூதரக அதிகாரிகள் வற்புத்தியதாகவும் பிரான்ஸ் உளவுத் துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், முன்னாள் அமெரிக்கப் போர் விமானி (Ryan Bodenheimer) ரியான் போடன்ஹைமர், ஆப்ரேஷன் சிந்தூரில், இந்திய விமானப்படையின் மின்னணு போர் நுட்பங்கள், பாகிஸ்தான் விமானப்படையை முற்றிலும் குழப்பின என்று கூறியுள்ளார்.
குறிப்பாக, ரஃபேலின் X-Guard அமைப்பு, பாகிஸ்தானின் PL-15E ஏவுகணைகள் மற்றும் J-10C போர் விமானங்களை ஏமாற்றின என்று குறிப்பிட்டுள்ள முன்னாள் F-15E மற்றும் F-16 விமானியான ( Ryan Bodenheimer ) ரியான் போடன்ஹைமர், இது இந்திய விமானப்படையின் கண்ணுக்குத் தெரியாத, புத்திசாலித்தனமான மற்றும் தந்திரமான ஏமாற்றும் வித்தையாகும் என்று பாராட்டியுள்ளார்.
X-Guard என்பது ஒரு ஏமாற்று அமைப்பு ஆகும். உண்மையான அமைப்புகளைப் பிரதிபலிக்கும் போலி இலக்குகளை முன்வைத்துத் தாக்குபவர்களைத் தவறாக வழிநடத்தப் பயன்படுத்தப்படும் ஒரு ஏமாற்றும் பாதுகாப்பு நடவடிக்கையாகும்.
X-Guard இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட fiber-optic decoy system ஆகும். 30 கிலோ எடையுள்ள இந்த கருவி ரஃபேல் விமானத்தின் பின்னால் ஒரு fiber-optic கேபிளால் இணைக்கப் பட்டுள்ளது. மேலும், ரஃபேல் விமானங்களின் SPECTRA மின்னணு போர் தொகுப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இது எதிரி ரேடார்கள் மற்றும் ஏவுகணைகளை ஏமாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
X-Guard, 360 டிகிரி சுற்றளவில் jamming ஜாமிங் சிக்னல்களை அனுப்பும். எதிரி நாட்டின் ரேடார்கள் மற்றும் ஏவுகணைகளைக் குழப்பும். இது ரேடார் கையொப்பத்தைப் போலியாக உருவாக்கி, உண்மையான போர் விமானம் போல இது தோற்றமளிக்கும்.
செயற்கை நுண்ணறிவுடன் செயல்படும் X-Guard, எதிரி ரேடார்களைக் குழப்புவதற்காக, நிகழ்நேரத்தில் சிக்னலை மாற்றிக்கொண்டே இருக்கும். இதனால் எதிரியின் ஏவுகணைகள், உண்மையான ரஃபேல் போர் விமானத்துக்குப் பதிலாக இந்த X-Guard-யை குறிவைக்கின்றன.
எதிரியின் ரேடார் சிக்னல்களைப் பதிவுசெய்து கையாளும் Digital Radio Frequency Memory தொழில்நுட்பத்தைப் X-Guard பயன்படுத்துகிறது. இதன் மூலம் தவறான இலக்குகளை உருவாக்கி, எதிரியின் ரேடார் மற்றும் ஏவுகணை அமைப்புகளை X-Guard தவறாக வழிநடத்துகிறது.
PL-15E போன்ற வானிலிருந்து வான் ஏவுகணைகள் மற்றும் நிலத்திலிருந்து வான் ஏவுகணைகள் ஆகிய இரண்டிலிருந்தும் X-Guard பாதுகாப்பை வழங்குகிறது. இந்த அதிநவீன தொழில்நுட்பம், ரஃபேல் போர் விமானத்தின் சிறப்பம்சமாகும்.
ஆப்ரேஷன் சிந்தூரில், X-Guard பாகிஸ்தானின் PL-15E மற்றும் J-10C போர் விமானங்களின் Active Electronically Scanned Array போன்ற ரேடார்களை தவறாக வழிநடத்தியது. இதனால் அவை வெறும் நிழல்களைத் துரத்தி, இந்திய விமானப்படையின் அறிவுநுட்பத்தில் ஏமாந்து போனதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்க ஏமாற்று விமானங்களைப் போல் அல்லாமல், இந்தியாவால் மேம்படுத்தப்பட்ட X Guard இரண்டு வினாடிகளுக்குள் மின்னல் வேகத்தில் செயல்பட்டு எதிரிகளைத் திணறடித்துள்ளது.
உலகம் இதுவரை கண்டிராத ஒரு சிறந்த ஏமாற்று அமைப்பால், இந்தியா விமானப்படை உலகையே வியக்க வைத்துள்ளது. ஒரு வான்வழிப் போரை எப்படி எதிர்கொள்வது ? எப்படி எதிர்த்துத் தாக்குவது? மற்றும் எதிரியின் கண்ணுக்குப் புலப்படாமல் எப்படி வெற்றி பெறுவது? என்பது பற்றி ஆப்ரேஷன் சிந்தூரில், நவீனயுக வான்வழி போருக்கான புதிய உத்தி மற்றும் புதிய தரத்தை இந்தியா நடைமுறைப்படுத்திக் காட்டியுள்ளது.