மதுரை மாநகராட்சியின் ஆளுங்கட்சி மண்டலத் தலைவர்கள் அனைவரையும் ராஜினாமா செய்யச் சொல்லி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்திருக்கும் உத்தரவின் பின்னணியில் மிகப்பெரிய மோசடி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. நீதிமன்றமும், மாமன்றமும் எடுக்க வேண்டிய முடிவை ஆளுங்கட்சி என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி திமுகவினரே எடுத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான தனியார் கட்டடங்கள் உள்ளன. ஒவ்வொரு பகுதிக்கு ஏற்றார்போல கட்டடங்களுக்கு வரி விதிக்கப்படும் நிலையில், அந்த வரிவிதிப்பில் முறைகேடு நடைபெறுவதாகப் புகார் எழுந்தது.
மாநகராட்சியில் தீர்மானம் மூலமாகவோ அல்லது நீதிமன்ற உத்தரவின் மூலமாகவோ குறைக்கப்பட வேண்டிய வரியை மாநகராட்சி அதிகாரிகளின் ஆதரவோடு ஆளுங்கட்சியினர் குறைத்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதாவது வரியைக் குறைப்பது போலக் குறைத்து தனியார் நிறுவனங்களிடமிருந்து கணிசமான தொகையைப் பெற்றதன் மூலம் சுமார் 200 கோடி ரூபாய் அளவிற்கு மதுரை மாநகராட்சிக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது.
வரிக்குறைப்பு மோசடியைக் கண்டுபிடித்த மதுரை மாநகராட்சியின் முன்னாள் ஆணையர் தினேஷ்குமார், ஐந்து பில் கலெக்டர்களை சஸ்பெண்ட் செய்ததோடு, வரிவிதிப்பு அதிகாரியின் பாஸ்வேர்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். கடந்த ஓராண்டாக நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் மண்டலத் தலைவர் ஒருவரின் உதவியாளர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் என 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தரக்கூடிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தனியார் கட்டடங்களுக்கு வழக்கமாக வரிவிதிக்கும் வரிவிதிப்பு அதிகாரிகளின் பாஸ்வேர்டை திருடி கம்யூட்டர் ஆப்ரேட்டர்களே ஆளுங்கட்சியினரின் உத்தரவுக்கு ஏற்ப வரியை நிர்ணயம் செய்திருப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது.
தோராயமாக 10 ஆயிரம் ரூபாய் வரி கட்டவேண்டிய தனியார் நிறுவனத்தை அணுகி 5 ஆயிரம் ரூபாய் கட்டினால் போதும் எனக் கட்டணத்தை வாங்கிவிட்டு அனைத்து வரிகளையும் கட்டியது போலக் கணக்குக் காட்டியிருப்பதும் உறுதியாகியுள்ளது.
மதுரை மாநகராட்சியில் நடைபெற்றிருக்கும் இந்த மோசடி சம்பவம் ஆளுங்கட்சியின் கவுன்சிலர்கள், மண்டலத் தலைவர்கள் உத்தரவின்படியே நடந்ததாகக் கைதானவர்கள் ஒப்புக் கொண்டதால் பிரச்சனை பூதாகரமானது. மிகப்பெரிய அளவில் நடைபெற்றிருக்கும் மோசடியை எதிர்க்கட்சிகள் கையிலெடுக்கத் தொடங்கியதை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேருவை விசாரிக்கும் படி உத்தரவிட்டார்.
மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் அமைச்சர் நேரு தலைமையில் நடைபெற்ற விசாரணையில் திமுக மண்டலத் தலைவர்கள் புவனேஷ்வரி, பாண்டிச்செல்வி, முகேஷ் சர்மா, கவிதா ஆகியோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டன.
மண்டலத் தலைவர்களிடம் நடைபெற்ற விசாரணை அறிக்கையின் அடிப்படையில் 5 மண்டலத் தலைவர்களையும் ராஜினாமா செய்ய முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அவரின் உத்தரவை ஏற்று அனைவரும் ராஜினாமா செய்திருக்கும் சம்பவம் மதுரை மாநகராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 200 கோடி ரூபாய் அளவில் நடைபெற்றிருக்கும் வரிக்குறைப்பு மோசடியை எதிர்க்கட்சிகள் பெரிதாக்குவதற்கு முன்பாகவே இதனை முறியடிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே ராஜினாமா தொடர்பான உத்தரவை முதல்வர் பிறப்பித்திருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது.
முறைகேடு தொடர்பான புகார் கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கும் நிலையில், ஆளுங்கட்சி மண்டல தலைவர்கள் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுத்த முதலமைச்சர், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது.
அதே நேரத்தில் மதுரை மாநகராட்சியில் மட்டுமல்லாது மற்ற மாநகராட்சிகளிலும் இதுபோன்ற முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பிருப்பதால் அனைத்து மாநகராட்சிகளிலும் உரிய ஆய்வை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
நீதிமன்றமும், மாமன்றமும் கூடி எடுக்க வேண்டிய முடிவை ஆளுங்கட்சி என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி திமுகவினரே எடுத்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.