ஏமன் நாட்டவரை கொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு, வரும் 16ல் துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த நிமிஷா பிரியா, ஏமனில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். 2014ம் ஆண்டு, அவரது கணவர் மற்றும் குழந்தை இந்தியாவுக்கு திரும்பினர். இதற்கிடையே, அங்கு உள்நாட்டு போர் ஏற்பட்டதால், நிமிஷா பிரியாவால் நாடு திரும்ப முடியவில்லை. ஆகவே, ஏமனைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் இணைந்து மருத்துவமனை துவங்குவதற்கு முயற்சி செய்தார்.
அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையில், மஹ்தியை கொலை செய்ததாக நிமிஷா பிரியா, 2017ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கிடையே நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை நிறுத்த இந்திய வெளியுறவுத்துறை முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.