பிரதான் மந்திரி திவ்யாஷா கேந்திரா எனும் மையத்தின் மூலம் முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள் என அனைவரும் பயன்பெறும் வகையில் இலவசமாக பல்வேறு உபகரணங்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. இலவச உபகரணங்களைப் பெறும் முறை குறித்தும் அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் ஏழ்மையை 14.2 சதவீதத்தில் இருந்து 2.3 சதவீதமாகக் குறைத்திருக்கிறது. மக்கள் ஆரோக்கியத்தில் அதீத அக்கறை கொண்டிருக்கும் மத்திய அரசு, முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகளுக்கான பல்வேறு வகையிலான உபகரணங்களை இலவசமாக வழங்கி வருகிறது.
பிரதான் மந்திரி திவ்யாஷா கேந்திரா எனும் மையத்தை உருவாக்கி, அதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில் ADAP எனப்படும் Assistance to Differently Abled people எனும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள், செவிதிறன் குறைபாடு உடையவர்கள் மற்றும் சிறப்புத் திறன் கொண்டவர்களுக்கு பிரத்யேக உபகரணங்களை மத்திய அரசு வழங்கி வருகிறது.
மாற்றுத் திறனாளிகளுக்கான 3 சக்கர பேட்டரி வாகனங்கள், சக்கர நாற்காலிகள், கை தாங்கி நடப்பான்கள், பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான நவீன வாக்கிங் ஸ்டிக் என அவரவர் தேவைகளுக்கு ஏற்றாற்போல பயன்பட்டு உபகரணங்களும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
அதே போல ராஷ்டிரிய வயோஸ்ரீ யோஜனா திட்டத்தின் கீழ், 60 வயது நிறைந்தவர்களுக்கான கிரிப் பேண்டுகள், இடுப்பு வலி நிவாரணி பேண்டுகள், செவி திறன் குறைபாடு உடையவர்களுக்கான கருவி மற்றும் கை தாங்கி நடப்பான்களும் எவ்வித கட்டணமின்றி வழங்கப்படுகின்றன.
கற்றல் திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ரூபாய் 8,000 மதிப்புள்ள 20 பொருட்கள் அடங்கிய கிட் உள்ளிட்ட அனைத்துவிதமான உபகரணங்களும் பிரதான் மந்திரி திவ்யாஷா கேந்திரா மையத்தின் மூலமாக முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவது பயனாளிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
சென்னை கே கே நகர் ESI மருத்துவமனையில் செயல்படும் இம்மையத்தைத் தொடர்பு கொண்டு தேவையான சலுகைகளைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டை, ரேஷன் அட்டை மற்றும் 22,500 ரூபாய்க்குக் கீழ் வருமானம் உடையவர்கள் இந்த சேவைகளில் முற்றிலுமாக பயனடையலாம் எனவும், ESI மருத்துவமனையை இந்த சேவைகளுக்காக அணுகும் நபர்கள், மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்ற பின், அவர்களுக்கான உபகரணங்களைப் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கை கால்கள் செயலிழந்து ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் சிலருக்கு, ADAP திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற பேட்டரி சக்கர வாகனத்தால், வெளி உலகைத் தற்சார்பாகப் பார்ப்பதற்கும், சொந்தமாகத் தொழில் செய்வதற்குமான நம்பிக்கையை மத்திய அரசு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது
வருமானத்தில் நலிவடைந்த குடும்பங்களில் வாழும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதோடு அவர்களின் மனதில் புதிய தன்னம்பிக்கையையும் விதைத்திருக்கிறது.