ஆப்ரேஷன் சிந்தூரில், இந்தியாவின் துல்லியமான தாக்குதல்களுக்கு முன், சீனாவின் ரேடார் பயனற்றது என்பது நிரூபிக்கப்பட்டது. எனினும், ஈரானை ஏமாற்றிப் பாதுகாப்பு அமைப்பைச் சீனா விற்றுள்ளது தெரியவந்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
HQ-9B என்பது சீனாவில் வடிவமைக்கப்பட்ட ஒரு நீண்ட தூர வான் பாதுகாப்பு அமைப்பாகும். அமெரிக்க மற்றும் இஸ்ரேல் தொழில்நுட்பங்களுடன் உருவான இந்த வான் பாதுகாப்பு அமைப்பு, எதிரி விமானங்கள், ட்ரோன்கள், பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்ளிட்ட வான்வழி அச்சுறுத்தல்களை இடைமறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டதாகும். அதிகபட்சம் 300 கிலோமீட்டர் தூரத்துக்குள் ஒரே நேரத்தில் 10 இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டதாகும்.
2021 ஆம் ஆண்டில் HQ-9B-யை தனது இராணுவத்தில் சேர்த்தது பாகிஸ்தான். இந்தியாவின் ரஃபேல், பிரம்மோஸ் போன்ற ஏவுகணைகளை இடைமறிக்க இது உதவும் என்று பாகிஸ்தான் நம்பி வாங்கியது. ஆனால் பாகிஸ்தானின் நம்பிக்கை இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூரில் வீணாகிப் போனது.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை, HQ-9B, HQ-16 மற்றும் PL-15 ஏவுகணைகள் உள்ளிட்ட சீனா பாகிஸ்தானுக்கு வழங்கிய ஆயுதங்கள் எல்லாம் இந்தியாவின் துல்லியமான தாக்குதல் செயல்திறனுக்கு முன்,பயனற்றவை என்பதை உலகுக்கு நிரூபித்தது.
ஏற்கெனவே, கடந்த ஆண்டு, பாகிஸ்தான் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் ஈரான் தாக்கிய போதும், அவற்றை இடைமறிக்க முடியாமல் HQ-9B திணறியது. ரஷ்யாவின் S-400க்கு இணையான வான் பாதுகாப்பு அமைப்பு என்று கூறப்படும் HQ-9B, ஆப்ரேஷன் சிந்தூரில் செயலற்று போனதற்கு, பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.
அதிநவீன பாதுகாப்பு அமைப்பை இயக்க போதுமான பயிற்சி இல்லாத பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. அடுத்ததாக, இந்தியாவின் மின்னணு போர் மற்றும் ஸ்டெல்த் ஏவுகணைகள் HQ-9B இன் ரேடாரைக் குழப்பியிருக்கலாம் என்றும், அதிக பராமரிப்பு செலவுகள் காரணமாக, பாகிஸ்தானில் உதிரிப் பாகங்களின் பற்றாக்குறையால் செயல்பாட்டுத் தயார்நிலையில் இல்லாமல் இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தியாவின் பிரம்மோஸ் போன்ற அதிநவீன க்ரூஸ் ஏவுகணைகளை இடைமறிக்கும் திறன் கொண்டதாக HQ-9B இல்லை என்று பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கூறியுள்ளனர். நான்கு நாட்கள் நடந்த ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், பாகிஸ்தான் இராணுவத்தின் தோல்வி, சீனாவின் HQ-9B வான் பாதுகாப்பு அமைப்பின் நம்பகத்தன்மையையும் கேள்விக் குறியாக்கியுள்ளது.
இந்தச் சூழலில், HQ-9B வான் பாதுகாப்பு அமைப்பை ஈரானுக்குச் சீனா வழங்குவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இருந்து, கடுமையான புவிசார் அரசியல் சவால்களையும் ராணுவ அச்சுறுத்தல்களையும் ஈரான் எதிர்கொள்கிறது.
வான்வழித் தாக்குதல்களைத் துல்லியமாக இடைமறித்து அளிக்கும் வான் பாதுகாப்பு அமைப்புகளை வைத்திருப்பது ஈரானின் தேவையாக உள்ளது. நீண்ட தூர வான் பாதுகாப்பை வழங்கும் சீனாவின் HQ-9B யை நிலைநிறுத்த ஈரான் முடிவெடுத்துள்ளது.
பாகிஸ்தானில் வான் பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் சேதமடைந்த தனது HQ-9Bயின் செயல்திறனை மீண்டும் நிரூபிக்க ஈரானைச் சீனா பயன்படுத்திக் கொள்கிறது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடை காரணமாக ஈரானுடனான இந்த ஒப்பந்தம் சீனாவுக்கு நிலையான மற்றும் சாத்தியமான தள்ளுபடியில் எண்ணெய் விநியோகத்துக்கு வழிவகை செய்துள்ளது.
ஈரான் தனது வீரர்களுக்கு முழுமையான பயிற்சியை உறுதி செய்தாலும், பராமரிப்பு மற்றும் உதிரிப் பாகங்களுக்குச் சீனாவை நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இஸ்ரேலும், அமெரிக்காவும் எதிரியின் ரேடார் கண்ணுக்குப் புலப்படாத போர் விமானங்கள் மற்றும் HQ-9B இன் ரேடார் அமைப்புகளைத் தவிர்க்கக்கூடிய அதிநவீன ஏவுகணைகளைக் கொண்டுள்ளன. இந்நிலையில், ஈரானில் சீனாவின் HQ-9B தனது செயல்திறனை நிரூபிக்குமா என்பது கேள்வியாகவே உள்ளது.
HQ-9B அமைப்பைத் திறம்பட ஒருங்கிணைத்து வெற்றிகரமாகப் பயன்படுத்துவது, மத்திய கிழக்கில் போர் களத்தின் போக்கையே மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.