பட்டாசு ஆலை விபத்தால் உயிரிழப்பு ஏற்படுவதைத் தடுக்க இரண்டு குழுக்களை அமைத்து பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இதன் விசாரணையில், விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை விபத்துகள் நிகழ்ந்து, தொழிலாளர்கள் பலியாவது மிகுந்த வேதனை அளிப்பதாகத் தீர்ப்பாயம் தெரிவித்தது.
பட்டாசு ஆலை உரிமையாளர்கள் ஆலைகள் செயல்படுவதற்கான பாதுகாப்பு விதிகள் குறித்து அறிந்திருக்கவில்லை என்பதையே விபத்துகள் காட்டுவதாகவும் பசுமை தீர்ப்பாயம் வேதனை தெரிவித்தது.
பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி அளிக்கும் முன் அனைத்து உரிமங்களும் பெறப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்த பின்னரே தடையில்லா சான்று வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்குப் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
மேலும் பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிகள் முறையாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய இரண்டு குழுக்களை அமைத்தும் பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.